நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான ஆட்டம் மழையால் ரத்தானது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்குச் செல்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து வெலிங்டனில் தென்னாப்பிரிக்கா – மேற்கிந்தியத் தீவு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடர்மழை காரணமாக ரத்தானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.
இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி 9 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தும் இந்திய அணியும் தங்களது கடைசி ஆட்டங்களில் தோல்வியடையும் பட்சத்தில் மேற்கிந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
இந்நிலையில் லீக் சுற்றின் கடைசி இரு ஆட்டங்களில் இங்கிலாந்து அணி வங்கதேசத்துக்கு எதிராகவும், இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் மோதவுள்ளன.
இதில் இந்தியா தோல்வியடைந்தால் 6 புள்ளிகளுடன் போட்டியிலிருந்து வெளியேறிவிடும். அதேசமயம் 7 புள்ளிகள் கிடைக்கப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும்.இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.