கோவாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருடத்துக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கோவா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பாஜக த தேர்தல் அறிக்கையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருடத்துக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்குவது தொடர்பான முன்மொழிதல் தயாரிக்கும்படி கோவா உணவுத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கோவா முதல்வர் ப்ரமோத் சாவந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
கோவாவில் அந்தியோதயா ரேஷன்கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு வருடத்திற்கு மூன்று கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் ரேஷன் கடைகளில் மலிவு விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக சர்க்கரையை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. சமையல் எண்ணெய் மலிவான விலையில் விற்பனை செய்யப்படும்.
-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.