தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது:
வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், குமரி, நெல்லை, தென்காசி ஈரோடு, தேனியில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மே 27-ம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.
– இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.