‘கல்கி’ எனும் பெயரைக் கேட்டவுடன் தமிழ் மக்களுக்கு உடனே நினைவுக்கு வருவது அவர் எழுதிய பொன்னியின் செல்வனும் கூடவே சிவகாமியின் சபதமும், தியாக பூமி, அலை ஓசை, பார்த்திபன் கனவு, கள்வனின் காதலி போன்ற இதர பெரும் நாவல்கள்தான்!
ஆனால், இவற்றைத் தவிர சுமார் முப்பதாண்டு காலத்தில் அவர் ஒரு எழுத்தாளர் என்ற வகையில் 120க்கும் அதிகமான சிறுகதைகளும், நெடுங்கதைகளும் எழுதி இருக்கிறார். இவற்றையும் தாண்டி, கல்கி கிருஷ்ணமூர்த்தி பத்திரிகை ஆசிரியர், கலை விமர்சகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று மும்முறை சிறை சென்றவர்.
1999ல் அமரர் கல்கியின் நூற்றாண்டு துவக்க விழாவும், நிறைவு விழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. அப்போது, அன்றைய தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர், அமரர் கல்கியின் எழுத்துக்களை அரசுடமையாக்கி அமரர் கல்கிக்கு பெருமை சேர்த்தார்.
தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் உள்ள தமிழ் அமைப்புகள் அமரர் கல்கி நூற்றாண்டு விழாவினைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். மேலும், திருவனந்தபுரம் தொடங்கி புது டெல்லி வரை பல்வேறு இந்திய நகரங்களில் மட்டுமின்றி, கடல் கடந்தும் அமரர் கல்கிக்கு தமிழ் அமைப்புகள் ஆர்வத்துடன் விழா எடுத்து மகிழ்ந்தார்கள்.
இப்போது மீண்டும் நாம் அமரர் கல்கியைக் கொண்டாடும் தருணம் வந்துள்ளது! ஆம்! வரும் 2024 செப்டம்பர் 9ம் தேதி அமரர் கல்கியின் 125வது பிறந்த தினம். அதனை முன்னிட்டு, செப்டம்பர் மாதம் 8ம் தேதி ஞாயிறு அன்று சென்னையில் இவ்விழாவினை சிறப்புடன் கொண்டாட கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை, அடையாறு துர்காபாய் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையின் டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சென்னை ஐ.ஐ.டியின் இயக்குனர் வீ.காமகோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.
‘கல்கி’ பத்திரிகையைத் தொடங்கியபோது, இந்தப் பத்திரிகைக்கு மூன்று நோக்கங்கள் உண்டு - முதல் நோக்கம் தேச நலன், இரண்டாவது நோக்கம் தேச நலன், மூன்றாவது நோக்கமும் தேச நலன்தான் என்று ஆணித்தரமாக எழுதினார் கல்கி கிருஷ்ணமூர்த்தி.
வீ.காமகோடியும் தேச நலனை தாரக மந்திரமாகக் கொண்டவர். மாணவர் நலனை உயிர்மூச்சாகக் கொண்டவர். கணினி சார்ந்த ஆராய்ச்சியில் உலக அங்கீகாரம் பெற்றுள்ள இவர், விஞ்ஞான ஆராய்ச்சியாளர், கல்வியாளர், ஆலோசகர் என பல தளங்களில் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருப்பவர். கம்ப்யூட்டர் கட்டுமானம், தகவல் பாதுகாப்பு போன்றவற்றில் ஆழ்ந்த நிபுணத்துவம் கொண்டவர்.
அன்றைய நிகழ்ச்சியில் அமரர் கல்கியின் வண்ணமிகு வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்த ஆவணப் படம் ஒன்றும் வெளியிடப்படுகிறது. ‘பேனா போராளி கல்கி’ என்ற பெயரில் அமரர் கல்கியின் எழுத்துநடையைப் போன்றே சுவாரசியமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் காணொளி ஆவணத்தை கல்கி குழுமம் தயாரித்துள்ளது.
பட்டுப் பாரம்பரியத்தில் நூற்றாண்டு கண்ட ஆரெம்கேவி நிறுவனம், இந்தப் பணியில் கல்கி குழுமத்துடன் பெருமையோடு கைகோர்த்துக் கொண்டுள்ளது. அத்துடன், வழக்கம் போல இரண்டு இளம் இசைக்கலைஞர்களுக்கு ‘கல்கி விருது’ வழங்கப்படுகிறது.
இவ்வாண்டுக்கான விருதைப் பெறும் ‘தேசூர் சகோதரர்கள்’ என அழைக்கப்படும் தேசூர் சகோதரர்கள் வித்வான் ஷண்முகசுந்தரம் வித்வான் சேதுராமன், காஞ்சி காமாக்ஷி கோயிலின் ஆஸ்தான வித்வான்கள். காஞ்சியில் அர்ப்பண உணர்வுடன் இசைத்து வரும் இவர்கள், வீ.காமகோடி கையால் விருது பெறுவதென்பது யதேச்சையாக அமைந்த பொருத்தம். நிகழ்ச்சியினைத் தொடர்ந்து விருது பெறும் தேசூர் சகோதரர்கள் நாதஸ்வரக் கச்சேரி வழங்க இருக்கிறார்கள்.
அமரர் கல்கியின் 125வது பிறந்த நாள் விழாவில் வெளியிடப்படும் ‘பேனா போராளி கல்கி’ காணொளியை செப்டம்பர் 9ம் தேதி காலை 9 மணி முதல் kalkionline யூ.டியூப் சேனலில் கண்டு மகிழலாம்.