பண்டைய காலத்தில் மன்னர்கள் தமிழ் புலவர்களுக்கு பரிசிலை வாரி வாரி வழங்கி தமிழின் மீது தமக்கிருந்த பற்றினை வெளிப்படுத்தினர். ஆனால் சமயத்தை பரப்ப வந்த இத்தாலி நாட்டு மத போதகர் தமிழின் மீது இருந்த பற்றின் காரணமாக தமிழைக் கற்று தமிழில் பல நூல்களை இயற்றி தமிழுக்காகவே வாழ்ந்த மாமேதை வீரமா முனிவர் குறித்து காண்போமா?.
இத்தாலி நாட்டு கிறிஸ்துவ மத போதகர் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி. இவர் நவம்பர் 8 1680 ஆம் வருடம் இத்தாலியில் உள்ள கேசுதிகிலிபோன் என்னும் இடத்தில் பிறந்தார். 1709 ஆண்டு இயேசு சபையின் குருவான பின் 1710 ஆம் ஆண்டில் தன்னுடைய 30ஆவது அகவையில் தமிழகத்துக்கு வருகை புரிந்தார்.
கோவா, கொச்சி, அம்பலக்காடு வழியாக மதுரை மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பட்டி வந்தடைந்த பெஸ்கி தமிழறிவு மிகவும் இன்றியமையாதது என்றை உணர்ந்து தமிழகம் வந்து தமிழராகவே மாறி தம் பெயரையும் தத்துவ போதகர் என மாற்றிக்கொண்டு தமிழ் பணிபுரிந்த ராபர்ட் டி நொய்யிலி என்னும் மேலைநாட்டு இறையடியாரை பின்பற்றி தைரியநாதர் என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார்.
இதுவே பின்னாளில் மக்களால் வீரமா முனிவர் என அழைக்கப்பட்டார். மதுரை தமிழ் சங்கத்தார் இப்பெயரை இவருக்கு சூட்டினர் என்பவர் சிலர்.
பெயரை மட்டும் மாற்றிக் கொள்ளாமல் தம்முடைய தோற்றத்தையும் நம் நாட்டில் இருந்த சமய தொண்டர்கள் போலவே மாற்றிக்கொண்டு நெற்றியில் சந்தனம் பூசி காதில் முத்து கடுகன் அணிந்து காவி அங்கி உடுத்தி புலித்தோல் பதிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து காய்கறி உணவை மட்டுமே உண்டு சைவ உணவு முறைக்கு மாறினார்.
சுப்ரமணிய கவிராயர் மூலம் தமிழ் புலமைப் பெற்ற வீரமாமுனிவர் இலக்கிய சுவடிகளை பல இடங்களில் தேடி எடுத்ததால் சுவடி தேடும் சாமியார் எனவும் அழைக்கப்பட்டார். மேலும் தமிழ் கற்க ஏதுவாக தமிழ் லத்தின் அகராதியை உருவாக்கினார். இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.
அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே அதற்கு பதிலாக நீண்ட கோடு இருக்கும். மேலும் குறில் நெடிலை விளக்க துணைக்கால் சேர்த்து எழுதுவது வழக்கம். அ என எழுத அர என இரண்டு எழுத்துக்கள் வழக்கில் இருந்ததை மாற்றி அ, ஏ என மாறுதல் செய்தவர் இவரே.
தமிழ் இலக்கண இலக்கியங்கள் கவிதை வடிவில் இருந்ததை உரைநடையாக மக்கள் மனதில் எளிதில் பதிய வைத்தவரும் வீரமா முனிவரே.
பொதுவாக புலவர்கள் தத்தம் மொழியிலேயே படைப்புகளை படைப்பது வழக்கம். ஆனால் இத்தாலி நாட்டிலிருந்து வந்து தமிழ் மொழி கற்று இலக்கிய படைப்புகளில் மிக அறியதாக கருதப்படும் தேம்பாவணி எனப்படும் காப்பியம் ஒன்றை தமிழில் இயற்றி வெற்றி கண்டார் வீரமாமுனிவர். மேலும் திருக்காவலூர் கலம்பகம், அடைக்கலமாலை அன்னை அழுங்கல் அந்தாதி, சித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும், சதுரகராதி எனப்படும் அகராதியையும் தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் எழுதியுள்ளார். இவற்றுள் தொன்னூல் விளக்கம் குட்டி தொல்காப்பியம் என அழைக்கப்படும் பெருமையுடையது.
இப்படி பல்வேறு வகையான நூல்களைப் படைத்த ஒரு புலவரை காண்பது தமிழில் மட்டுமின்றி உலகின் பிற மொழிகளிலும் கூட மிக அரிய ஒன்றாகும்.