கோவிந்தப் பத்தார் விடிகாலையிலேயே வந்து விட்டார். பழநி என்ற பழநியப்பன் பல் கூட துலக்காமல் டீ குடித்துக்கொண்டிருந்த ஐந்தரை மணி அப்போது. பழநியின் மனைவி சரசா கோபப்பட்டு ஏதாவது கத்துவாள் என்று பழநி பயந்தபடி ஆகவில்லை. “வாங்க மாமா”, என்று கோவிந்தப் பத்தாருக்கும் ஒரு லோட்டா டீ கொடுத்து உபசரித்தாள் அவள். டீயும் நீர்க்காமல், தாராளமாக சர்க்கரை போட்டு கனமான தேத்தண்ணீரோடு வந்ததால் பருகப் பருக சொர்க்கம் தெரிந்தது. பழநியின் சொர்க்கத்தில் பத்தார் எதுக்கு கூட வரணும்?
“ரெண்டு மணிக்கே எழுந்திட்டேன், நேத்து ராத்திரி பரோட்டா கடை டிவி பெட்டியிலே செய்தி படிச்சபோது இது ஒரு வினாடி நேரம் வந்து போச்சா, தூக்கமே இல்லே”. பத்தார் அவசரமாக டீயை விழுங்கி கன்னத்தை நனைத்துக் கொண்டார். தரையிலும் வழிந்தது அது.
”அர்ஜெண்ட் விஷயமா மாமா”? பழநி லோட்டாவை மூக்கில் படக் கவிழ்த்து சர்க்கரையை வாயில் சரித்தபடி பத்தாரைப் பார்த்தான்.
”அர்ஜெண்ட் தான். வெய்யில் ஏற முந்தி போய்ட்டு வந்துடறோம். சோமுவை அனுப்பி வை” என்றார் பத்தார் அவசரமாக. சோமு பழநியின் அப்பா பெயர். அவர் இறந்து போய் ஒரு வருஷமாச்சு.
”இதோ வந்தாச்சு மாமா. உடுப்பு மாட்டி விட்டுக்கிட்டிருக்கேன்”.
சரசா சிரித்துக் கொண்டே சொல்லியபடி வர, கூடவே சாதுவாக பின்னங்காலில் நடந்தபடி சோமு. குரங்கு. குரங்குக்கு சோமு என்று பழநி அப்பா பெயரைப் போட்டது அப்பா இறந்து போன அப்புறம் தான்
பத்தார் கிளி ஜோசியம் பார்த்தும், பழநியின் அப்பா குரங்கை வைத்து ஆட வைத்தும் சம்பாதிக்கிற வகை. ஏப்பை சாப்பை தொழில் இல்லை இதெல்லாம். தினசரி இரண்டு பேருக்கும் தலா நூறு ரூபாயாவது வருமானம் தவறாமல் கிடைக்கும். ஒரு ஆத்திர அவசரத்துக்குத் தேவைப்படலாமே என்று குரங்காட்டி கிளி ஜோசியமும், கிளி ஜோசியர் குரங்காட்டவும் தெரிந்தவர்களானார்கள்.
பத்தாருக்கு எம்.கே.டி என்ற எம் கே தியாகராஜ பாகவதர் நடித்த சினிமா என்றால் உயிர். சோமு ஏழேழு ஜன்மத்துக்கும் பியூசி என்ற பி யூ சின்னப்பாவின் தீவிர ரசிகர். அதிசயத்தில் அதிசயமாக தண்டபாணி தேசிகர் நடித்த நந்தனார் என்றால் ரெண்டு பேருக்கும் பிடிக்கும். நாளைப் போகாமல் இருப்பேனோ என்று சேர்ந்து
பாடுவார்கள். நந்தனார் சினிமா வந்தால் போய்வருவார்கள். இது தவிர 1940களின் சிறிய, பெரிய நடிக நடிகையர் பற்றிய தகவலை இருவரும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.
காலையில் ஆறு மணிக்குக் கிளம்பி இரண்டு பேரும் சேர்ந்து போவதை தினசரி பார்த்த இட்லி அவிக்கும் அன்னம்மா கிழவி ’ராம லட்சுமணன் மாதிரி இருக்கீங்களே’ என்று கன்னத்தில் போட்டுக் கொள்வாளாம். தினம் தெருவோடு வரும் தெய்வங்கள் அவர்கள்.
காலனியில் அடுத்த அடுத்த தெருவில் வீடு. பத்தார் கல்யாணம் காட்சி என்று போகவில்லை. வயதான அம்மாளை சீக்குக்காக சிஷ்ருசை செய்வதில் நேரமும் காசும் செலவிட்ட தனிக்கட்டை ஜீவிதம். அவர் சிநேகிதர் சோமு கல்யாணம் பண்ணி பிள்ளை பழநியைப் பெற்று சரசாவை அவன் பெண்டாட்டி ஆக்கினார். சோமு பெண்டாட்டி முத்தம்மா பஸ் மோதி சாக, கிட்டத்தட்ட அவரும் தனிக்கட்டை தான்.
வாரக் கடைசி தவிர, அமாவாசை, பௌர்ணமி, என்றும் சிநேகிதர்கள் இருவரும் தொழிலுக்குப் போகாமல் இருந்தது அபூர்வம். ஓடியன் தியேட்டரில் பாகவதர் படமோ, சின்னப்பா சினிமாவோ நூற்றெட்டாம் முறை ஓடினால் இரண்டு சிநேகிதர்களும் விடுப்பு எடுத்துப் போய் சினிமா பார்ப்பார்கள். கூடவே, பாகவதர், சின்னப்பா பிறந்த நாள், இறந்த நாளுக்கும் ஓய்வு எடுத்துக்கொண்டு, திண்ணையில் மாலை போட்டு புகைப்படம் வைத்து, கேசட்டில் அவர் பாடிய பாட்டெல்லாம் பாடவைத்து, தேங்காய் உடைத்து, கற்பூர தீபம் காட்டி, சர்க்கரைப் பொங்கல், வடை படைத்து வழிபடுவது வழக்கமாக இருந்தது.
”இப்படியே எல்லாம் சரியாக ஓடினால் சரிதான் ஆனால் நம்மிலே யாராவது ஒருத்தர் தடாரென்று இறந்து போனால் இதெல்லாம் நீடிக்க என்ன செய்யணும்?”
சோமு கேட்க, பத்தார் சொன்னார் – ”ஆலாலசுந்தர சாமிகளை போய்ப் பார்ப்போம்”. சாமியார் இந்தக் காலனியில் இருந்தவர் தான், பக்தர் கூட்டம் நிறைய வருவதால் பெரிய வீதியில் நாலாம் மாடியில் டூ பெட்ரூம் அபார்ட்மெண்ட் நாற்பது லட்ச ரூபாய்க்கு வாங்கிக் குடியேறி விட்டார்.
எதற்கு வந்தோம் என்று சோமு விளக்க, இது ஒரு பிரச்சனையே இல்லை என்றார் சாமியார் தாடிக்குள் சிரித்துக்கொண்டு.
சிநேகிதர்களில் யாராவது இறந்து போக, அவர் கிளி ஜோசியக்காரர் என்றால் கூண்டுக் கிளியையும், குரங்காட்டி என்றால் குரங்கையும்
சாமியாரிடம் அழைத்துக் கொண்டு போகணும். அவர் மந்திரம் மாயம் என்று சடங்கு சம்பிரதாயம் பண்ணி போன உயிரை, அது ஜோசியக்காரன் என்றால் கிளிக்கோ, மற்றவர் என்றால் குரங்குக்கோ, கடத்தி விட்டு விடுவார். அப்படி கூடு விட்டுக் கூடு பாய வைப்பதற்கான கட்டணத்தை இருநூற்று முப்பத்தேழு ரூபாய், வரி பதினெட்டு சதவிகிதம் சேர்த்துக் கட்டி வைக்க வேண்டும்.
கிளிக்கும் குரங்குக்கும் மனுஷ உயிரைக் கூடு விட்டுக் கூடு பாய வைத்தால் அவற்றுக்குள்ளே ஏற்கனவே இருந்த கிளி, குரங்கு ஆவி என்ன ஆகும்? கரிசனத்தோடு சாமியாரைக் கேட்டார்கள்.
“அதைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை, நான் பார்த்துக் கொள்வேன்”, என்று மயில் இறகால் சிரத்தில் அடித்து கண்ணை விரித்து பற்பசை மணக்க ஊதி ஆசிர்வாதம் பண்ணினார் அவர்.
பழநியப்பனிடம் இதைச் சொன்னபோது ”ரொம்ப பிரமாதம் பத்தார் மாமா. அப்பா ஆவி குரங்குக்குள்ளே வந்து வீட்டுலே பெரிய மனுசனா சும்மா நடமாடிக்கிட்டு இருந்தால் போதும். எனக்கும் கவுரதையாக இருக்கும்” என்று உடனே சரி சொல்லிவிட்டான். அவன் பெண்டாட்டிக்குத்தான் வீட்டுக்குள் குரங்கு உருவத்தில் மாமனார் சுற்றிச் சுற்றி வருவது பிடிக்கவில்லை. அவளை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். பெண்களை யார் அபிப்ராயம் கேட்கிறார்கள்?
தினம் வருமானத்தில் இருந்து ஐம்பது ரூபாய் மருமகளுக்குக் கொடுப்பதால் ராஜ உபசாரம் தான் சோமுவுக்கு என்று இருந்தது. காப்பி, தினசரி பேப்பர், வாசனை சோப்பு உபசாரம் எல்லாம் கூட உண்டு. அப்புறம் கோவிட் பாதித்து சோமு செத்துப் போனார். சோமுவின் உயிரை, சாமியார் அவர் வளர்த்த குரங்குக்குள் அடுத்து செலுத்தினார். அது ஆனதும், குரங்கை அப்பா என்று பழநியும், மாமா என்று பழநி வீட்டுக்காரியும் அழைக்க, அக்கம்பக்கம் சிரிக்க ஆரம்பித்தது இன்னும் ஓயவில்லை.
பழநி வீட்டுக்காரி வீட்டுக்காரனோடு சதியாலோசனை செய்தாள்- ”இந்தக் குரங்கை மாமா போனதுமே வேறே குரங்காட்டிக்கு நல்ல தொகை படிந்தால் விற்றுப் போட யோசித்திருந்தேன். இப்போது என்னடா என்றால் நாள் முழுக்க இது வீட்டுக்குள்ளேயே சுற்றி வந்து தொந்தரவு செய்கிறது. சட்னி அரைக்க தேங்காய்ப் பத்தை எடுத்து வைத்தால் எடுத்துத் தின்று விடுகிறது. சோறு வடித்து குழம்பு வைத்தால் நேராகப் பிசைந்து சாப்பிட்டு விடுகிறது. மீன் கறி வைத்தால்கூட விடமாட்டேன் என்கிறது. உலகத்திலேயே மீன் தின்னும் சைவக் குரங்கு உங்கப்பாவாகத்தான் இருக்கும். நாள் முழுக்க
வீட்டுக்குள்ளேயே இது சுற்றி வராமல் பிரதி வெள்ளியன்று பத்தார் மாமா தன் சிநேகிதக் குரங்கை வெளியே கூட்டிப் போய் ஆட்டபாட்டமாக எல்லாம் செய்வித்து வரும் காசில் பாதி நமக்கும் அவருக்கு மீதியுமாக வருமானத்தைப் பிரித்துக் கொள்ளலாமே.”
பழநி தயங்கித் தயங்கி இந்த திரிசமனான யோசனையை பத்தாரிடம் சொல்ல, ”நல்ல ஐடியாடா மாப்பிளே” என்று அவர் சரி சொல்லி விட்டார். ஒவ்வொரு வெள்ளியும் கிளிக்கு ரெஸ்ட் கொடுக்கலாம். ஒரு மாறுதலுக்காக குரங்காட்டம் போடவைத்து காசு பார்க்கலாம். அந்தக் குரங்கு பிரியமான சோமுவின் உயிர் இப்போது வசிக்கிற ஒன்று. ஆக வாரம் ஒரு தடவை சோமுவோடு வெளியே போய், எம்கேடி பியூசி படப் பாட்டுகள் பற்றிப் பேசி, கேசட்டில் கேட்டு உருப்படியாக வருமானமும், பொழுது போக்குமாக வெள்ளிக்கிழமை கடந்து போகும். வருமானத்தில் பாதி சோமு மகனுக்குக் கொடுத்து விட்டு மீதி நாமே வைத்துக் கொள்ளலாம். பத்தாருக்குப் பிடித்துப்போன ஏற்பாடு அது.
சரி மாமா, சாயந்திரம் பார்க்கலாம் என்று உள்ளே போனான் பழநி. SPCA-வில் உத்தியோகம் அவனுக்கு. ”எங்க மாமா பத்திரம், பத்தார் மாமா” என்று கரிசனம் காட்டினாள் அவன் மனைவி.
“என்னப்பா போகலாமா?” என்று குரங்கைக் கேட்டார் பத்தார். குரங்குக்குள் இருந்து சோமு, போகலாம் என்றது பத்தாருக்கு கேட்டது.
பத்தார் கையில் பிடித்திருந்த கிளிக்கூண்டை சரசாவிடம் கொடுத்துவிட்டு சாயந்திரம் வரும்போது வாங்கிக்கறேன் என்றார்.
அவருக்கு முன்னால் ஓடி குட்டிக்கரணம் போட்டதை வைத்து சோமு மகிழ்ச்சியாக இருந்ததை பத்தார் கவனிக்கத் தவறவில்லை. ’என்ன விஷயம், விடிஞ்சதும் வந்துட்டே?’ என்று சோமு கேட்க, பத்தார் சொல்ல ஆரம்பித்தார் –
’நேற்று ராத்திரி டெலிவிஷனில் கிடைத்த செய்தி பழம்பெரும் நடிகர் குப்புடு காலமானார். அறுபது வருடம் முந்தி ’உன் புருஷன்’ சினிமாவில் சமையல்காரனாக வந்து பாடி, ஆடி அசத்தியவர்’.
இந்தத் தகவலில் ஏதோ பிழை இருப்பதாக பத்தாருக்குத் தெரிந்தது. என்ன என்று தெரிந்து கொள்ளத்தான் நண்பர் சோமுவைத் தேடி வந்திருக்கிறார். அவர்கள் வழக்கமாக சந்திக்கும் அடுத்த வெள்ளிக்கிழமையன்றே இதைப் பேச முடிந்தது தற்செயலானது.
குரங்கு ஈயென்று பல்லெல்லாம் தெரியக் காட்டி பத்தாரைச் சுற்றிச்சுற்றி வந்தது. ”குப்புடுன்னு யாரும் ஆக்ட் கொடுக்கலேப்பா, அப்புடுன்னு ஒருத்தர் இருந்தார். அவர் வேறே ஆள்” என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார் சோமு.
“குப்புடுவோ சுப்புடுவோ, அப்புடுவோ, நம்ம காலத்து மனுசர் அவர். நேற்றைக்கு போய்ச் சேர்ந்துட்டார். நேரே வைகுண்ட பதவி. இந்தப் பேட்டையிலே இன்னும் ரெண்டு தெரு தள்ளித்தான் வீடு. போய்ட்டு வந்துடலாமா”? சோமுவை நைச்சியமாகக் கேட்டார் பத்தார்.
சோமு முடியாது என்று ஒரேயடியாக மறுப்பதாக உறுமி வாலைச் சுழற்றினார்.
“நீ சொல்ல விட்டுட்டே பாரு .. நேற்று பியூசின்னப்பா காலமான நாள். எப்படி மறக்கும்? போகுது.. அதுக்கு இன்னிக்காவது நாலு ஏழை பரதேசிக்கு சாப்பாடு போடலாம். இப்ப அது போதும். அடுத்த வருஷம் திதி திவசம் கொடுத்துடலாம்”. அவர் உறுதியாகச் சொன்னார்.
”சோமு நீயும் நானும் சின்னப்பா மறைந்த தினத்தை கவனிக்க விட்டுட்டோம், போகுது அடுத்த வெள்ளி அன்னதானம் பத்து பேருக்கு வச்சுக்கலாம். இப்போ இந்த மூத்த ஆக்டர் அடுத்த தெருவிலே முதுமை காரணம் இறந்து போனதுக்கு அஞ்சலி செலுத்திட்டு வரலாம். அது சின்னப்பாவுக்கு அஞ்சலி செலுத்தின மாதிரி”. பத்தார் வாதாடினார்.
ஹூம் என்று உறுமி சோமு, பத்தார் தோளிலிருந்து குதித்து ஓடினார். மரத்தில் ஏறி மேலே போய், கையில் பறித்துக் கொண்டு வந்திருந்த யாருடைய செல்ஃபோனையோ பத்தார் மேல் வீசினார். ”அய்யய்யோ குரங்கு தப்பிச்சு ஓடுது பிடி பிடி” என்று அலறினார் பத்தார்.
குரங்கு. அந்த வார்த்தை சரசரவென்று மிருக குணத்தைக் கிளறிவிட, கீழே தாவி இறங்கி, பத்தாரைத் தரையில் தள்ளினார் சோமு. பிடிக்க ஓடிவந்த மளிகைக்கடைக் காரரை முகத்தில் பிராண்டிவிட்டு போக்குவரத்து நெரிசலுக்கு இடையே ஓடி மறைந்தார் அவர்.
குரங்கைத் தேடி சாயந்திரம் வரை அலைந்து விட்டு சோமு வீட்டுக்கு அந்திப் பொழுதில் போய்ச் சேர்ந்தார் பத்தார். வீட்டில் ஒரு மூலையில் உட்கார்ந்து சோமு வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தார், பழநி பெண்டாட்டிக்கு ஒத்தாசையாக. பக்கத்துக் கூண்டில் பத்தாரின் கிளி பொருபொருவென்று யாரையோ பற்றி வம்பு பேசிக் கொண்டிருந்தது.
(நிறைவு)