உலகெங்கும் ஆண்டுதோறும், மே மாதம் 8ம் தேதி உலக செஞ்சிலுவை தினம் மற்றும் உலக செம்பிறை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் செஞ்சிலுவை சங்கத்தை தொடங்கிய ஹென்றி டியூனாண்ட் பிறந்த நாள்.
ஹென்றி டியூனாண்ட் மே 8, 1828ம் வருடம் சுவிட்சர்லாந்தின், ஜெனிவா நகரில் பிறந்தார். இவர், தன்னுடைய வேலை நிமித்தமாக, 1859ம் வருடம் இத்தாலியில் உள்ள சால்ஃபரீனோ என்ற நகரத்திற்குச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலைய வைத்தது. அப்போதுதான், போர் நடந்து முடிந்திருந்த அந்த நகரில், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போர் வீரர்கள், அடிபட்டு மோசமான காயங்களுடன் இருந்தனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி செய்வதற்கும், அவர்களுக்கு உணவளிப்பதற்கும் ஒருவரும் இருக்கவில்லை. இதனைக் கண்டு வருத்தப்பட்ட ஹென்றி, தான் வந்த வேலையை மறந்து, மூன்று நாட்கள் தங்கி, அங்கிருந்த மக்கள் உதவியுடன், காயமடைந்த போர் வீரர்களுக்கு முதலுதவி செய்தார்.
ஜெனிவா திரும்பிய ஹென்றியால் இந்த நிகழ்வை மறக்க முடியவில்லை. தான் கண்ட நிகழ்ச்சியை விளக்கும் விதமாக, ‘சால்ஃபரீனோ நினைவுகள்’ என்ற புத்தகத்தை எழுதினார். அந்தப் புத்தகத்தில் முக்கியமாக, ‘போரில் காயமடையும் வீரர்களுக்கு உதவுவதற்காக எந்த பக்கத்திலும் சாராத ஒரு பன்னாட்டு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்’ என்ற தனது கருத்தை வலியுறுத்தினார்.
புத்தகம் வெளியாகி ஒரு வருடம் கழித்து ஜெனிவா மக்கள் நல அமைப்பின் தலைவராக இருந்த குஸ்தவ் மாய்னீர், ஹென்றியின் கருத்தை வரவேற்று, போரில் காயமடைகின்ற வீரர்களுக்கு உதவும் நோக்கில், பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தார். இந்தப் பரிந்துரைகளின்படி உருவானது செஞ்சிலுவை சங்கம். 1864ம் வருடம் ஸ்விஸ் நாட்டின் நாடாளுமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஜெனீவா மகாநாட்டில் இந்த அமைப்பை உருவாக்குவதற்கு 12 நாடுகள் ஒப்புதல் அளித்தன. காலப்போக்கில் மேலும் பல நாடுகள் இணைந்தன. ஜெனீவாவை தலைநகராகக் கொண்டுள்ள பன்னாட்டு செஞ்சிலுவை சங்கம், உலகெங்கும் உள்ள 191 செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களை ஒன்றிணைத்துள்ளது. இதன் மூலம் உலகெங்கும் 16 கோடி மக்கள் பயனடைகிறார்கள்.
1901ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைதிக்கான முதல் நோபல் பரிசை பெற்றார் ஹென்றி டியூனாண்ட். ஹென்றி பிறந்த தினமான மே 8ம் தேதி, உலக செஞ்சிலுவை தினமாக, 1948ம் வருடம் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும், உலக செஞ்சிலுவை தினத்திற்கு கருப்பொருள் அறிவிக்கப்படும். போன வருடத்திற்கான கருப்பொருள், ‘நாங்கள் செய்வது அனைத்தும் இதயத்திலிருந்து வருகிறது.’ இந்த வருடத்திற்கான கருப்பொருள், ‘நான் மகிழ்ச்சியுடன் கொடுக்கிறேன். நான் கொடுக்கும் மகிழ்ச்சி ஒரு வெகுமதி.’
செஞ்சிலுவை சங்கத்தின் முக்கிய கோட்பாடுகள் ஏழு. அவை:
1. மனிதாபிமானம்: மனித உயிரைக் காப்பது, உடல் நிலையை சீராக்குவது, ஒவ்வொரு மனிதனின் சுயமரியாதையை உறுதி செய்வது சங்கத்தின் முக்கியமான குறிக்கோள். இது மக்களிடையே புரிதலையும், நட்புறவையும் மற்றும் ஒருவர்க்கொருவர் உதவும் மனப்பான்மையையும் அதிகரிக்கும்.
2. பாகுபாடின்மை: நாடு, இனம், மதச்சார்பு, மொழி, அரசியல் கருத்து கொண்டு உதவி புரிவதில் பாகுபாடு காட்டக் கூடாது. மனிதனின் தேவைக்கான உதவி அளிப்பது, யாருடைய தேவை மிகவும் அவசரமோ அவருக்கு முதலில் சேவை செய்வது முக்கியமானது.
3. நடுநிலைமை: உதவி கோரும் யாவரையும் நடுநிலைக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது. வழங்குகின்ற உதவியில் இனம், மதம், அரசியல் சார்பு, கொள்கை சார்பு குறுக்கிடக் கூடாது.
4. சுதந்திரத்தன்மை: இந்த அமைப்பு சுதந்திரமான அமைப்பு. ஆனால், பல நாடுகளிலிருந்து இதில் இணைந்திருக்கும் அமைப்புகள் அரசு சாரா அமைப்புகள். ஆனால், அந்த நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டவை. ஆகவே, அந்த அமைப்புகள், செஞ்சிலுவை சங்கத்தின் குறிக்கோளைப் பின்பற்றி, சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
5. தன்னார்வு சேவை: இந்த அமைப்பு முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் பதவிக்கோ, இலாபத்திற்கோ ஆசைப்படாமல் நடத்தப்படுகிறது.
6. ஒற்றுமை: இந்த அமைப்பு, அது இருக்கின்ற நாட்டின் எல்லாப் பகுதியிலும், அதனுடைய மனிதாபிமான சேவைகளை மேற்கொள்ள வேண்டும்.
7. உலகு தழுவிய இயக்கம்: இந்த இயக்கத்தில் இணைந்துள்ள அனைத்து மக்களும் சம அந்தஸ்து உள்ளவர்கள். அவர்கள் ஒருவர்க்கொருவர் உதவிக் கொண்டு பொறுப்புகளை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
செஞ்சிலுவை சங்கம் இதுவரை மூன்று முறை (1917, 1944, 1963) அமைதிக்கான நோபல் பரிசை பெற்றிருக்கிறது.