ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் 13வது லீகில், அறிமுக வீரர்கள் தங்களது அரிய வாய்ப்புகளை மிகவும் நன்றாகப் பயன்படுத்தி சதங்கள், அரைசதங்கள் அடித்து அணியையே வெற்றிபெறச் செய்கிறார்கள்.
ஐசிசி உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 1ம் தேதி முதல் தொடர்ந்து மிக சுவாரசியமாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் 10 அணிகள் உலககோப்பை தொடரில் கலந்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 11 முதன்மை வீரர்களும் மற்றும் சில சப்ஸ்டிடியூட் வீரர்களும் உள்ளனர்.
ஒவ்வொரு அணிகளுமே போட்டிப்போட்டுக் கொண்டு விளையாடி முதல் நான்கு இடத்திற்கு வர முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் முதலில் நியூசிலாந்து அணியில் 23 வயதுடைய இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பிரபலமானார். தனது அறிமுக ஆட்டதிலையே அதுவும் ஒரு வீரரின் காயம் காரணமாக மாற்று வீரராக அணியில் விளையாடினார். ஐசிசி உலகக்கோப்பையில் தனது முதல் அறிமுக ஆட்டதிலையே இதுவரை 2 சதங்கள் 2 அரைசதங்கள் என மொத்தம் 406 ரன்கள் எடுத்திருக்கிறார்.
அதேபோல் இன்னொரு அறிமுக வீரரும் உலகக்கோப்பை தொடரில் கலக்கி வருகிறார். ஆனால் அவர் ரச்சின் அளவுக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலமாகவில்லை. ஆனால் அந்த இளம் வீரரின் திறமையையும் நிச்சயம் நாம் அங்கீகரிப்பது மிக அவசியமான ஒன்று. ஆம்! அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போது முக்கியமான தூணாக இருக்கும் அப்துல்லா சஃபிக் என்ற இளம் வீரர்தான்.
நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியை நெதர்லாந்தை எதிர்த்து விளையாடியது. ஆனால் அந்த ஆட்டத்தில் சஃபிக்கிற்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை . பாகிஸ்தான் இரண்டாவது போட்டியில் இலங்கையை எதிர்த்து விளையாடியது. இதில் பேட்ஸ்மேனாக முதன் முதலில் ஐசிசி போட்டியில் களமிறங்கிய சஃபிக் 103 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இது அணியின் வெற்றிக்கு மாபெரும் காரணமாக அமைந்தது.
நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சஃபிக் 69 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் என மொத்தம் 88 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியின் அபார வெற்றிக்குக் காரணமாக இருந்தார். இது இந்த தொடரில் அவரின் மூன்றாவது அரைசதமாகும். இந்த தொடரில் இதுவரை ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் அடித்து சஃபிக் அசத்தியுள்ளார்.
இதுவரை பாகிஸ்தான் அணியின் பக்க பலமாக இருந்த பாபர் அசாம் , ரிஸ்வானுக்கு பின் சஃபிக் தான் முக்கிய வீரராக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எதிரே வரும் ஸ்பின் மற்றும் வேகப்பந்துக்கு ஏற்றவாறு டெக்னிக்கை பயன்படுத்தி விளையாடுவது இவரை அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை வீரராக இருப்பார் என கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.