முன்னாள் முன்னணி வீரர் ஒருவர் யூட்யூப் சேனல் ஒன்றில் அளித்தப் பேட்டிதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, தேர்வு குழு தலைவரின் காலைத் தொட்டு வணங்காததால், தனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
பொதுவாக விளையாட்டு துறை மற்றும் சினிமா துறையில் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழும். அதனை வெளிப்படையாக தைரியத்துடன் வெகுசிலரே கூறுவார்கள். அந்தவகையில் எப்போதும் நாம் டெரராகவும் அக்ரஸிவ்வாகவும் பார்க்கும் ஒரு வீரருக்கு பின்னால்தான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆம்! அது கவுதம் கம்பீர்தான்.
கம்பீர், ஆடுகளத்தில் சண்டையிட்டு, ட்ரெஸ்ஸிங் ரூமில் சண்டையிட்டவரிடமே சிரித்துப் பேசுபவர், இந்திய வீரர்களை தான் கண்டித்து பேசினாலும், வெளிநாட்டு வீரர்கள் பேசினால் தட்டிக் கேட்பவர், யார் தவறு செய்தாலும் அது தவறுதான் என்று வெளிப்படையாக உண்மை பேசுபவர். ஆனால், அப்படிப்பட்டவர்களுக்குத்தான் அடிக்கடி கசப்பான சம்பவங்கள் நிகழும்.
அந்தவகையில், அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் கவுதம் கம்பீரைப் பேட்டி எடுத்தார். அப்போதுதான் கவுதம் இதுகுறித்து பேசினார். "நான் 12 அல்லது 13 வயதில் இருக்கும் போது பயிற்சி தலைவரின் காலை தொட்டு வணங்காத காரணத்தால் எனக்கு அண்டர் 14 கிரிக்கெட் தொடரில் விளையாட அனுமதி கிடைக்கவில்லை. அதுதான் எனது முதல் அண்டர் 14 தொடர். அப்போது எனக்கு நானே ஒரு சத்தியம் செய்து கொண்டேன். நான் இனி யாருடைய காலையும் தொட மாட்டேன், அதேபோல எனது காலையும் யாரையும் தொட விடமாட்டேன் என்று முடிவு செய்தேன்."
கவுதம் கம்பீரின் செயல்களைப் புரிந்துக் கொள்வது மிகவும் கடினம். இவரின் செயல்களுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் எப்போதும் இவரை எதிர்த்தே நிற்பார்கள். அதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் பலமுறை வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அவர் தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கிறார். அந்த அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப்பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலும் அவர் இடம் பெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கும் மிகக் குறைவாகவே வாய்ப்புள்ளது.