விளையாட்டு

ஐபிஎல் போட்டியைப் புகழ்ந்து பேசி சொந்த ஊர் ரசிகர்களிடம் மதிப்பிழந்த கான்வே!

கல்கி டெஸ்க்

சென்ற வாரம் நடந்து முடிந்திருக்கும் ஐபிஎல் 16வது சீசனில் சென்னை அணி வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியது. இந்த சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களம் இறங்கி தங்களது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை அசத்தி வந்தனர். அதிலும் கான்வே இந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 672 ரன்கள் எடுத்து, சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

டேவோன் கான்வே இணையதள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஐபிஎல் தொடரின்போது எம்.எஸ்.தோனி மற்றும் அவரது அணி எந்த மைதானத்தில் சென்று விளையாடினாலும் கிடைத்த வரவேற்பு, நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. இந்தியாவில் அதிகமாக விரும்பப்படும் நபராக, வணங்கப்படுபவராகவும் தோனி விளங்குகிறார். அவர் எங்கு சென்று விளையாடினாலும், தொடர்ந்து வந்து அவருக்கு ரசிகர்கள் தந்த ஆதரவு நம்ப முடியாததாக இருந்தது. தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள், மற்ற மைதானங்களுக்கும் பயணம் செய்து வந்து உற்சாகப்படுத்தியது, நாங்கள் விளையாடிய ஒவ்வொரு ஆட்டமும் சொந்த மண்ணில் விளையாடியது போன்றே இருந்தது’ என்று தெரிவித்து இருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் விளையாடிய அனுபவம் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘அணிக்குள் ஒரு நல்ல சூழல் இருக்கிறது. சீசன் முழுவதும் ஓபனிங்கில் பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஐபிஎல்லில் எனது ஆட்டத்தை வளர்த்துக்கொள்ளவும், திறமையை வெளிப்படுத்தவும், எனக்குக் கிடைத்த பெருமைக்குரிய வாய்ப்பாகும் இது. ஆட்டத்தின் வெவ்வேறு தருணங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை அனுபவம் வாய்ந்த அவர்கள் மூலம் நான் அறிந்துகொண்டேன்’ என்று கூறினார்.

இதற்கு முன்பு, சென்னை அணி ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற பிறகு பேசிய நியூசிலாந்து வீரர் கான்வே, ‘தனது கிரிக்கெட் வாழ்வில் இது தனக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி’ என்று தெரிவித்திருந்தது, நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ‘நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதை விட, ஐபிஎல் தொடரின் வெற்றிதான் உங்களுக்குப் பெரிதாக போய்விட்டதா? நாட்டுக்காக விளையாடுவதை விட, பணத்துக்காக விளையாடுவதுதான் உங்களுக்கு முக்கியமா?’ என அந்நாட்டு ரசிகர்கள் பலர் கான்வேவை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

அதைத் தொடர்ந்து அவர், ‘சிஎஸ்கே அணியின் வெற்றியை தனது டி20 கேரியரில் மிகச் சிறந்த வெற்றியாகவே கருதுகிறேன். இருந்தாலும், ஒட்டுமொத்தமாக என்னுடைய கேரியரில் சிறந்தது என்று சொல்ல மாட்டேன். டி20 கேரியரில் அது மிகப்பெரிய சாதனையாக இருந்தாலும், அனைத்தையும் விட, நியூசிலாந்துக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வென்றதே எனக்கு மிகவும் ஸ்பெஷலாகும்’ என்று கான்வே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

SCROLL FOR NEXT