விளையாட்டு

ஐபிஎல் கோப்பையை அடித்துத் தூக்கியது சிஎஸ்கே அணி!

கல்கி டெஸ்க்

ந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கும் குஜராத் டைட்டன் அணிக்கும் இடையே நடைபெற்றது. நேற்று நடைபெற வேண்டிய இந்த இறுதிப் போட்டி தொடர்ந்து பெய்த அடைமழையின் காரணமாக நிறுத்தப்பட்டு, இன்று மாலை தொடங்கியது. இந்தப் போடியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பௌலிங்கை தேர்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்வதற்காக வந்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விருத்திமான் சாஹா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் ஆட வந்தனர். பவர்பிளே வரை (6 ஓவர்) குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. அதிரடி ஆட்டக்காரர் கில் 39 ரன்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோத ஜடேஜா பந்து வீச்சில் மின்னல் வேக ஸ்டம்பிங் முறையில் கேப்டன் தோனி அவரை அவுட் செய்தார்.

ஷுப்மன் கில்லைத் தொடர்ந்து தமிழக வீரர் சாய் சுதர்சன் சாஹாவோடு ஜோடி சேர்ந்து ஆட வந்தார். சாஹா ஆட்டம் முதலே பொறுமையாக ஆடி அரை சதம் விளா 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து, சாய் சுதர்சனோடு ஜோடி சேர்ந்தர் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா. இருவரும் சிஎஸ்கேவின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து பவுண்டரி திசைகளை நோக்கி ஓட விட்டனர். இந்த ஜோடி 19 ஓவர்களில் 200 ரன்னைக் கடந்தது. அதிரடியாக விளையாடி வந்த சாய் சுதர்சன் தனது அற்புதமான ஆட்டத்தால் சதத்தை கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து ஆட வந்த ரஷித்கான் 20வது ஓவரின் கடைசி பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆகி, ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இறுபது ஓவர் முடிவில் குஜராத் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைக் குவித்தது. சென்னை அணி தரப்பில் தீக் ஷனா இரண்டு விக்கெட்டுகளையும் ஜடேஜா மற்றும் தீபக் சாஹர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அடுத்ததாக, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என் இமாலய இலக்கை எதிர்நோக்கி ஆட வந்தது சிஎஸ்கே அணி. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவோன் கான்வே ஆகியோர் ஆட வந்தனர். முதல் ஓவரை வீச வந்தார் முகமது ஷமி. அவர் நான்கு பந்துகள் வீசிய நிலையில் பெரிய மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. சிறிது நேரமே மழை பெய்தாலும் மைதானத்தில் தண்ணீர் நிற்கும் அளவுக்கு அதன் பாதிப்பு இருந்து. இதனால் மழை விட்டும் சில மணி நேரம் ஆட்டம் தாமதமானது. மீண்டும் ஆட்டம் நள்ளிரவுக்கு மேல் சுமார் 12.15 மணிக்குத் தொடங்கியது. ஆனால், ஓவர்கள் குறைக்கப்பட்டு DLS முறைப்படி 15 ஓவர்களில் 171 ரன்கள் சிஎஸ்கேவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதையடுத்து ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ள, அதிரடியும் ஆரம்பமானது. ஆறு ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்தது. அணியின் ஸ்கோர் 74 ரன்கள் என்று இருந்த நிலையில் ருதுராஜ் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அதையடுத்து ஷிபம் டூபே கான்வேவுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், அதே ஓவரில் கான்வேவும் 47 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதைத் தொடர்ந்து ஆட வந்தார் ரஹானே. இவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து ஆட வந்தார் அம்பதி ராயுடு. இவர்கள் இருவரும் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 13வது ஓவரில் 8 பந்துகளைச் சந்தித்து 19 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் ராயுடு. அவரைத் தொடர்ந்து பெரிய வரவேற்புடன் ஆட வந்தார் கேப்டன் தோனி. ஆனால் பெரிய ஏமாற்றமாக ரன் ஏதும் எடுக்காமல் தோனி முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஆட வந்தார் ஜடேஜா. கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மோகித் சர்மா அந்த ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் வெற்றி பெற 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா அந்த பந்தை சந்தித்தார். பவுண்டரியை அடித்து சிஎஸ்கேவுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதன் மூலம் இந்த வருடத்தின் ஐபிஎல் வெற்றிக் கோப்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் அடித்துத் தூக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT