ஐசிசி உலககோப்பைதொடரின் 32வது போட்டி நேற்று தென்னாப்பிரிக்காவை எதிர்த்த நியூசிலாந்து அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.
நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது.
தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரரான பவுமா 24 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவருக்குப் பின்னர் வெண்டர் டுசன் களத்தில் இறங்கி விளையாடினார். வெண்டர் மற்றும் குயின்டன் டி காக் சேர்ந்து மொத்தம் 200 ரன்கள் சேர்த்தனர்.குயின்டன் டி காக் 116 பந்துகளில் 114 ரன்கள் குவித்து இந்த உலககோப்பை தொடரின் நான்காவது சதத்தை அடித்தார். வெண்டர் 118 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து வலுவான இலக்கை நியூசிலாந்து அணிக்குக் கொடுத்தனர். அதேபோல் பேட்ஸ்மேன் மில்லர் வெறும் 30 பந்துகளிலேயே 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிஸ்கள் என 53 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். தென்னாப்பிரிக்கா அணியின் இந்த வெறித்தனமான விளையாட்டால் மொத்தம் 357 ரன்களை நியூசிலாந்து அணிக்கு இலக்காக கொடுத்தது. இந்த உலககோப்பையில் இதுவரை நான்கு போட்டிகளில் 350 ரன்கள் மேல் கொடுத்திருக்கிறது தென்னாப்பிரிக்கா அணி.
அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சும் ஆரம்பத்திலிருந்தே அசுரத்தனமாக இருந்தது. நியூசிலாந்து அணி அதனை எதிர்கொள்ள முடியாமல் மிகவும் தடுமாறியது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கான்வே இரண்டே ரன்களில் ஆட்டம் இழந்தார். ரச்சின் ரவீந்திரா 9 ரன்களில் விக்கெட் கொடுத்தார். அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் டாம் லதம் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இப்படி அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அணி மிக மோசமான நிலைக்குச் சென்றது. மற்றும் வில் யங் 33 ரன்கள், மிட்சல் 24 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ரன்கள் எடுத்தது க்ளென் பிலிப்ஸ் 50 பந்துகளில் 60 ரன்கள் கொடுத்தார். இதனால் தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் எதோ வெவ்வேறு ஆடுகளத்தில் பேட்டிங் செய்ததுபோல் நேற்றைய ஆட்டத்தின் போக்கு அமைந்தது.
இதனால் நியூசிலாந்து அணி 357 ரன்கள் இலக்கிற்கு வெறும் 167 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான தோல்வியை எதிர்கொண்டது. தற்போது தென்னாப்பிரிக்கா அணி ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகள் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி 12 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது.