இந்தியா-குவைத் இடையிலான கால்பந்து போட்டியில், இரண்டு அணி வீரர்கள் இடையே மைதானத்தில் தகராறு ஏற்பட்டது.
பெங்களூருவில் நடைபெற்று வரும் தெற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன் ஷிப் தொடரில், இந்தியா குவைத் பலப்பரீட்சை மேற்கொண்டது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் எதிரணி வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக வாதம் எழுந்தது.
இகோர் ஸ்டிமாக்கிற்கு மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது. கடைசி 10 நிமிடங்களில் இந்திய அணி ஒரு கோல் அடித்த போது, இகோர் ஸ்டிமாக் ஆக்ரோஷமாக கத்தினார். இதனால், அவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இந்நிலையில், விளையாட்டின் போது கட்டுப்பாட்டை இழந்த இந்திய அணி வீரர் ரஹிம் அலி, குவைத் வீரர் அல் கலாஃபை நெட்டித் தள்ளினார்.
இதனால், இரண்டு பேரும் மைதானத்திற்குள் சண்டை போடும் சூழல் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் நடுவர் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார். ஒரு வழியாக 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது. தெற்காசிய கால்பந்து போட்டியில் 3 ஆவது முறையாக இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் சண்டையிடுவது குறிப்பிடத்தக்கது.