ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த வீரர்கள்.
துபாயில் ஐபிஎஸ் போட்டிகளுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட பத்து அணி உரிமையாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ரூ.2 கோடி அடிப்படை விலையில் ஏலம் விடப்பட்டார். அவரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் போட்டி போட்டன. ரூ.7 கோடி வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்க ஆர்வம் காட்டியது.
இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகமும், சன்ரைசர்ஸ் நிர்வாகமும் குதிக்க ஏலம் சூடுபிடித்தது. சன்ரைசர்ஸ் ரூ.12 கோடி என விலையை அதிகரிக்க, ஆர்சிபி அதை ரூ.17 கோடி ஆக்கியது. இறுதியில் ரூ.20.5 கோடிக்கு அவரை வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இதன்மூலம் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வீரர் எனும் சாதனையை படைத்தார் கம்மின்ஸ்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏலத் தொகை எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை பாட் கம்மின்ஸ் பதிவுச் செய்த சில மணிநேரத்திலேயே, அதனை உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளார் சக அணி வீரர் மிட்செல் ஸ்டார்க். அவரை ரூ.24.75 கோடிக்கு வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஏலத்தின் 4வது செட்டில் இந்த சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்தார் மிட்செல் ஸ்டார்க். குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஸ்டார்க்கை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் கொல்கத்தா அணி நிர்வாகம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து ஸ்டார்க்கை கைப்பற்றியது.
இதற்கு முன் பஞ்சாப் அணி ரூ.18.5 கோடி கொடுத்து இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனை வாங்கியதுதான் அதிகபட்சமாக ஐபிஎஸ் ஏல தொகையாக இருந்தது.