இந்தியாவின் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் முரளி விஜய் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் 2008ம் ஆண்டு அறிமுகமானார். வலது கை விளையாட்டு வீரரான இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி, தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். இவர் இந்தியாவுக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒரு நாள் போட்டிகள், 9 T20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 3982 ரன்கள் அடித்துள்ளார். இதில் 15 அரை சதங்களும் 12 சதங்களும் அடங்கும். ஒரு நாள் போட்டிகளில் 339 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு அரை சதம் ஆகும். T20 போட்டிகளில் 169 ரன்கள் அடித்துள்ளார்.
2014ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில் வலிமையான பந்து வீச்சுக்கு இடையே 1000 பந்துகளை எதிர்கொண்டு தனது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2018ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியே முரளி விஜய்க்கு கடைசி போட்டியாக அமைந்தது. அதன் பிறகு அவர் இந்திய அணியில் இடம்பெறவே இல்லை. இந்த நிலையில் முரளி விஜய் தாம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “கிரிக்கெட் சார்ந்து உள்ள தொழில்களில் உள்ள வாய்ப்புகளைக் கண்டறியப்போகிறேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக முரளி விஜய், ‘பிசிசிஐ நம்பி தாம் சோர்ந்து விட்டதாகவும், வெளிநாடுகளின் வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும்’ தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் தற்போது முரளி விஜய் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.