மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக் தொடர் சமயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பி.டி.உஷா தனது அனுமதியின்றி புகைப்படம் எடுத்துக்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நடப்பு ஆண்டு ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், மிகச்சிறப்பாக விளையாடினார். மல்யுத்தத்தின் 50 கிலோ பிரிவில் கலந்துக்கொண்ட வினேஷ் போராடி ஒரே நாளில் மூன்று போட்டியாளர்களுடன் மோதி வெற்றிபெற்று வெற்றி வாகை சூடினார்.
ஆனால், அடுத்த நாளே அவருடைய எடை 50 கிராம் அதிகமானதாக கூறி போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், அந்த பதக்கம் யாருக்கும் வழங்கப்பட மாட்டாது என்று ஒலிம்பிக் நிர்வாகம் கூறிவிட்டது.
இதற்கிடைய அந்த 50 கிராம் எடையை குறைக்க ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல், நீர்ச்சத்து குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தொடர் சம்பவங்களால் மனமுடைந்துபோன வினேஷ் போகத், தனது ஓய்வையும் அறிவித்தார்.
அவர் மருத்துவமனையில் இருக்கும்போது, ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா நேரில் சென்று விசாரித்தார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டன. இதுகுறித்து இப்போது வினேத் போகத் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
அதாவது, “மருத்துவமனையின் படுக்கையில் இருக்கும்போது வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாது. வாழ்க்கையின் மோசமான கட்டத்தை கடந்து செல்லும்போது, அந்த தருணத்தில் என்னுடன் நிற்பதாக எல்லோரிடமும் காட்டுவதற்காக என் அனுமதியின்றி அவர் அந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கிறார். அதனை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளனர். உங்கள் ஆதரவை அவ்வாறு தெரிவித்திருக்க தேவையில்லை. இந்த சம்பவத்தால் உடைந்து போனேன்.
எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என்று தெரியவில்லை. பி.டி.உஷா என்னை மருத்துவமனைக்கு வந்து சந்தித்தார். புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னணி அரசியல். அரசியலில் நிறைய நடக்கிறது. என்னை மல்யுத்தத்தை விடவேண்டாம் என்று பலரும் கூறினர். நான் எதற்காக தொடர வேண்டும். எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது.” என்று பேசினார்.
இதற்கிடையே, வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.