மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா பகுதியைச் சேர்ந்த பிரியங்கா மோஹிதே என்ற இளம்பெண் இமயமலையில் 8 ஆயிரம் மீட்டருக்கு உயரமான 5 சிகரங்களை எட்டிப் பிடித்த முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
எனக்கு சிறுவயதிலிருந்தே மலை ஏறுவதில் விருப்பம் அதிகம். அந்த வகையில் இப்போது உலகின் 3-வது உயரமான சிகரமான காஞ்சன்ஜங்கா சிகரத்தை (8,586 மீ) சென்றடைந்தேன்.
இதையடுத்து 8,000 மீட்டருக்கு மேலுள்ள 5 சிகரங்களை அடைந்த முதல் இந்தியப்பெண் என்ற சாதனை கிட்டியுள்ளது. இதற்கு முன்னதாக 2013-ல் எவரெஸ்ட் சிகரம் (8,849 மீ), 2018-ம் ஆண்டு லோட்சே மலை (8,516 மீ), மவுண்ட் மகாலு (8,485 மீ) மற்றும் ஏப்ரல் 2021-ல் அன்னபூர்ணா மலை (8,091 மீ) ஆகியவற்றை ஏறியுள்ளேன்.
-இவ்வாறு பிரியங்கா தெரிவித்தார்.
இவரது இச்சாதனைகளுக்காக 2020 –ல் டென்சிங் நார்கே சாகச விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.