வெஸ்ட் இண்டீஸின் 27 வருட கனவு நிறைவேறியது. ஆம்! ஆஸ்திரேலியாவை எதிர்த்து கடந்த 25ம் தேதி முடிவடைந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தா ஷமர் ஜோசப் யார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஷமர் ஜோசப், கயானா என்ற ஒரு கிராமத்தில் 1999ம் ஆண்டு பிறந்தார். கயானாவில் பராக்காரா என்ற இடத்திலிருந்து வெளி உலகத்திற்கு வரவே வராத மக்களில் ஷமர் ஜோசப் மட்டும் கிரிக்கெட் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் தெரியவந்திருக்கிறார். ஆம்! இந்த பராக்காரா என்ற இடத்தில் 2018ம் ஆண்டு வரை வலைத்தளம், போன் என எதுவுமே இல்லை, டிவி மட்டும்தான் அங்கு இருந்தது.
அதுவும் பழங்காலத்து ப்ளாக் & வைட் டிவி. இந்த இடத்திற்கு அருகில் இருக்கும் ஒரே நகரம் நியூ அம்ஸ்டெர்டாம். அதுவும் இங்கு காஞ்சே ஆற்றின் படகில் செல்ல சுமார் 121 கிமீ கடக்க வேண்டும். பக்கத்து நகருக்கே செல்ல இவ்வளவு தூரம் எடுக்கும் அந்த கிராமத்திலிருந்து ஷமர் வர 24 வருடங்கள் ஆகிற்று. ஷமர் சிறு வயதிலிருந்தே மரம் வெட்டும் பணி செய்து வந்தார். அப்போது ஒருமுறை ஒரு ராட்ச மரம் ஒன்று அவர் மீது விழப் பார்த்த நிலையில் நூழிலையில் உயிர் தப்பினார். அந்த சமயத்தில் அவருடைய மனைவி கர்ப்பமாக இருந்தார்.
பின் மரம் வெட்டும் தொழிலை கைவிட்ட ஷமர் நீயூ அம்ஸ்டெர்டாம் நகரத்தில் செக்யூரிட்டி வேலையில் சேர்ந்தார். இவர் இவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரர் ஆவார் என்பது மூன்று வருடத்திற்கு முன்னர் வரை கூட அவருக்குத் தெரியாது. இவர் சிறு வயதிலிருந்தே டென்னிஸ் பால் வைத்தும் ப்ளாஸ்டிக் பாட்டில்களை பேட்டாகப் பயன்படுத்தியும் விளையாடி வந்தார். ஷமர் நகரத்தில் வேலை செய்யும்போதுதான் போன், வலைதளம், எஸ்கலேட்டர் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துக்கொண்டார். வாரம் முழுவதும் வேலைக்கு சென்று வார இறுதியில் டென்னிஸ் விளையாடி வந்தார் ஷமர்.
சரியாகப் பத்து வருடங்களுக்கு முன்னர் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டாமியன் வான்டல் பராக்காரா கிராமத்தை சுற்றிப் பார்க்க சென்றார். அப்போதே ஷமரின் விளையாட்டு மீதிருந்த தனித்துவமான செயல்கள் அந்த வீரரை ஈர்க்கச் செய்தது. அதன்பின்னர் ஷமர் நகரத்திற்கு வந்த சில காலங்களில் வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட் க்ளப்பில் நுழைவதற்கு, டாமியனே உதவி செய்தார். பிற்பாடு தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரான ரோமேரியோ ஷெப்பார்ட்டின் தொடர்பு ஷமருக்கு கிடைத்தது. அவர் ஷமருக்கு கிரிக்கெட்டின் யுக்திகளைக் கற்றுத்தந்தார்.
பிற்பாடு ஷமரின் பந்து வீச்சு ஸ்டைலைப் பார்த்து கயானா கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. ஷமரின் திறமையான விளையாட்டால் விரைவாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டார். அந்தவகையில் 17ம் தேதி ஜனவரி அன்று ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளயாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார், ஷமர். கபாவில் விளையாடிய ஷமர் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளைத் தொடர்ந்து எடுத்தார்.
அதன்பின்னர் இப்போட்டி கடந்த 25ம் தேதி முடிவடைந்தது. தனது அறிமுக ஆட்டத்திலேயே மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி 17 என்ற ஏவரேஜில் உள்ளார் ஷமர் ஜோசப். அதுவும் தனது முதல் பந்திலேயே முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை பெற்றிருக்கிறார். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸின் 27 வருட கனவு நிறைவேறியது. திறமைக்கு வாய்ப்புக் கொடுக்கும் அணிக்கு வெற்றி கட்டாயம் ஒரு வாய்ப்பு கொடுக்கும் என்பது இதன்மூலம் தெரிய வந்திருக்கிறது.
‘வான் உயர சாதனை’ என்பதன் பொருள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு எடுத்துக்காட்டாக மாறியவர் என்றால் அது ஷமர் ஜோஷப் தான்.