Yuvraj - Samson 
விளையாட்டு

யுவராஜ் சிங் சாதனையில் இணைவாரா சஞ்சு சாம்சன்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

டி20 போட்டிகளில் முதன்முறையாக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்தவர் யுவராஜ் சிங். ஆக்ரோஷம் மற்றும் அதிரடி பேட்டிங்கால் தனக்கென தனியிடத்தைப் பிடித்தவர் யுவராஜ். இவருக்குப் பின் இந்திய வீரர்கள் யாரும் 6 சிக்ஸர்களை ஒரே ஓவரில் அடிக்கவில்லை. சமீபத்தில் சாம்சன் மட்டும் 5 சிக்ஸர்களை விளாசினார். இந்நிலையில் யுவராஜ் சாதனையில் சாம்சனும் இணைவாரா என அலசுகிறது இந்தப் பதிவு.

டி20 போட்டிகளின் வருகைக்குப் பின் பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டம் பௌலர்களை திக்குமுக்காடச் செய்கிறது. அதற்கேற்ப கிரிக்கெட் விதிமுறைகளும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே உள்ளன. இதனால் டெஸ்ட் போட்டிகளில் கூட அதிரடி ஆட்டத்தை நம்மால் காண முடிகிறது. பௌலர்களை காப்பாற்றுங்கள் என முன்னாள் வீரர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், அதிரடி ஆட்டம் மட்டும் குறைந்தபாடில்லை. ரசிகர்களும் பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தைக் காணவே விரும்புகின்றனர்.

ஐபிஎல் தொடர் உலகளவில் பிரசித்தி பெற்ற கிரிக்கெட் தொடராகும். ஐபிஎல் போட்டிகளை அதிரடியின் உச்சம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பந்துகள் நாலாபுறமும் பறக்கின்றன. எத்தனை அதிரடி பேட்ஸ்மேன்கள் வந்தாலும் டி20 போட்டியில் யுவராஜ் சிங் அடித்த 6 சிக்ஸர்களை ஈடு செய்ய முடியுமா என்பது சந்தேகம் தான். முதல் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி சாதனை படைத்தார் யுவராஜ். இவருக்குப் பின் சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் யாரும் இந்தச் சாதனையை நெருங்கக் கூட இல்லை.

சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதமடித்தார். 47 பந்துகளில் 111 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த சாம்சன், ரிஷாத் ஹூசைன் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்க விட்டார். இன்னும் ஒரு சிக்ஸரை அடித்திருந்தால் யுவராஜ் சிங் செய்த சாதனையை சமன் செய்து அவருடன் இணைந்திருப்பார் சாம்சன்.

சாம்சனின் கனவு:

“ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாச வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. இந்தச் சாதனையை நிகழ்த்த பிரத்யேகமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். 6 சிக்ஸர்களை ஒரே ஓவரில் அடிக்க ஸ்பின் ஓவர் தான் சிறந்தது என நினைத்தேன். ரிஷாத் ஹூசைன் ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசியது மகிழ்ச்சி அளிக்கிறது. கூடிய விரைவில் நிச்சயமாக நான் 6 சிக்ஸர்களை அடிப்பேன்” என சாம்சன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு பிறகு, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கைரன் பொலார்டு இலங்கை அணிக்கு எதிராக 6 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்தார். அவருக்குப் பிறகு சாம்சன் அந்தச் சாதனைக்கு அருகில் வந்து சென்றிருக்கிறார். இருப்பினும் யுவராஜ் சிங் மற்றும் கைரன் பொலார்டு வரிசையில் சாம்சன் இணைவாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த 5 கேள்விகளை படுக்கை நேரத்தில் உங்கள் குழந்தைகளிடம் கட்டாயம் கேளுங்கள்! 

புது அம்சங்களை அள்ளிக் கொடுத்த YouTube… நீங்க எதிர்பார்க்கும் அத்தனையும் இருக்கு! 

எழும்புக்கூடுகள் நிரம்பிய ரூப் குந்த் ஏரி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சிறுகதை – பிறவிக்குணம்!

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா? 

SCROLL FOR NEXT