நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கு முதுகெலும்பின் சீரான செயல்பாடு மிகவும் முக்கியமாகும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அன்றாட செயல்பாட்டிற்கும் முதுகெலும்பின் ஆரோக்கியம் அவசியமாகிறது. அத்தகைய முதுகெலும்பை பாதுகாக்கும் 10 முக்கியமான விஷயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. நேரான நிமிர்ந்த தோரணை: நேரான நிமிர்ந்த தோரணையில் நிற்பதால் முதுகுத்தண்டும் மற்றும் பிற தசைகளும் இயல்பான முறையில் இருக்கும் என்பதால் முதுகுத்தண்டின் அழுத்தம் குறைகிறது. மேலும், முதுகை முதுகெலும்புடன் சீரமைத்து நமது தோள்கள் தளர்வாக இருப்பதை உறுதி செய்துகொள்வதோடு இந்த நிலையில் எப்போதும் நமது கால்கள் தரையில் தட்டையாக இருக்க வேண்டும் மற்றும் முழங்கால் உள்மூட்டு தரையில் செங்குத்தாக இருக்க வேண்டும்.
2. உடற்பயிற்சி: தினசரி உடற்பயிற்சி என்பது, அதாவது நடைப்பயிற்சி, நீச்சல், யோகா போன்ற பயிற்சிகள் செய்வதால் முதுகெலும்பை சுற்றியுள்ள தசைகள் வலுப்படும் என்பதால் தவறாமல் இப்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
3. பொருட்களை சரியாக தூக்குங்கள்: எந்த ஒரு கனமான பொருளை தூக்கும்போதும் முழங்கால்கள் வளைய வேண்டுமே தவிர, தூக்கும்போது முதுகெலும்பை சுழற்றக் கூடாது. இல்லையென்றால் இது மிகவும் கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும்.
4. முழுதாக நீட்டவும்: தசைகள் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க கை, கால்களை முழுவதுமாக நீட்ட வேண்டும். இந்த நீட்சி முதுகெலும்பின் நெகிழ்வுத் தன்மைக்கு உதவி புரிகிறது. முதுகு, இடுப்பு மற்றும் கால்களில் பெரும்பாலான முயற்சிகள் செய்து நீட்சி பயிற்சிகளை செய்யவும்.
5. ஏதுவான படுக்கை: முதுகெலும்பு நரம்புகள் மற்றும் திசுக்கள் குணமடைய ஒரு நல்ல இரவு தூக்கம் அவசியம் என்பதால் முதுகு தரையில் படுமாறு தூங்க வேண்டும். மெத்தை அல்லது குஷனில் உட்காரும்போது முதுகெலும்பை ஆதரிக்கும் அமைப்பு உள்ளவற்றில் மட்டுமே அமர வேண்டும்.
6. ஹைட்ரேட்டாக இருங்கள்: தண்ணீர் முதுகு தண்டுகளின் நெகிழ்வுத் தன்மையை பராமரிக்க உதவும் என்பதால் அடிக்கடி தண்ணீர் குடிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
7. நீண்ட நேரம் உட்காரக் கூடாது: நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது முதுகு வலி மற்றும் விறைப்பு ஏற்படும் என்பதால் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும்.
8. சரியான செருப்பை தேர்ந்தெடுங்கள்: கால் அளவுக்கு ஏற்ற நல்ல வளைவு மற்றும் குஷனிங் கொண்ட செருப்புகள் மட்டுமே முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் என்பதால் ஹை ஹீல்ஸ் தட்டையான காலணிகளை தவிர்ப்பது நல்லது.
9. ஆரோக்கியமான எடை: அதிக உடல் பருமன் முதுகெலும்பு பகுதியில் அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால் உடல் எடையை சீரான முறையில் பராமரிக்க வேண்டும். குறைந்த கலோரி கொண்ட உணவுகள், பழங்கள், காய்கறிகள், முழு தானிய பொருட்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும்.
10. வழக்கமான சுகாதார பரிசோதனை: வருடத்திற்கு ஒருமுறை வழக்கமான சோதனைகள் செய்வதன் மூலம் முதுகெலும்பில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும் என்பதால் வருடாந்திர பரிசோதனைகளை கட்டாயமாக செய்து கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்ட 10 வழிமுறைகளையும் கையாள, முதுகெலும்பு ஆரோக்கியத்துடன் இருக்கும்.