ஆயுஷ்மான் பாரத் செயல்பாடுகள்: ‘ஆயுஷ்மான் பாரத்’ என்பது பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம். இது அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் உலகிலேயே மிகப்பெரிய சுகாதார உறுதித் திட்டமாகும். ஆயுஷ் அமைச்சகத்தின் 2023ம் ஆண்டின் முதல் சிந்தனை முகாம் பிப்ரவரி மாதம் அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது. பாரம்பரிய மருந்துகள் தொடர்பான அம்சம் புதுதில்லி ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டு பிரகடனத்தில் இணைக்கப்பட்டது. ஆயுஷ் அமைச்சகம் பாரம்பரிய மருத்துவத் துறையில் உலக சுகாதார அமைப்புடன் திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஆயுஷ் விசா அறிமுகம்: ஆயுஷ் விசா அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெற இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு சிறப்பு விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுஷ் விசா மருத்துவ பயணத்தை அதிகரிக்கும் என்பதுடன் இந்தியாவை ஒரு மருத்துவ மையமாக மாற்றும்.
யோகா தினம்: நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்த 2023ம் ஆண்டு சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், இரண்டு கின்னஸ் உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
ஒன்பதாவது சர்வதேச யோகா தினத்தின் சிறப்பம்சமாக, ‘ஓஷன் ரிங் ஆஃப் யோகா’ என்ற தனித்துவமான அம்சம் நடத்தப்பட்டது. இதில் 19 இந்திய கடற்படை கப்பல்களில் சுமார் 3500 கடற்படை வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச கடல்களில் யோகா தூதர்களாக 35,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்தனர். ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரையிலான யோகா இந்த ஆண்டு (2023) யோகா தினத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
குஜராத் பிரகடனம்: பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் உலகளாவிய உச்சி மாநாடு (17 - 18 ஆகஸ்ட் 2023) உலக சுகாதார அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் அதை நோக்கி செயல்படுவதற்கான உலக சுகாதார அமைப்பின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி குஜராத் பிரகடனம் வெளியிடப்பட்டது.
‘பாரம்பரிய மருத்துவம் குறித்த ஜி 20 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மாநாடு’ நடைபெற்றது.
நவம்பர் 10, 2023 அன்று 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயுர்வேத தினம் அனுசரிக்கப்பட்டதால் ஆயுர்வேதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிரபலமடைந்துள்ளது.
2023ம் ஆண்டு பாரம்பரிய மருத்துவத்தின் உலக தலைமையகம் இந்தியா என்று (WHO) உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
2023ல் தமிழகத்தில் மருத்துவத்துறையின் சாதனைகள்:
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று தானம் ஆகியவற்றில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது என ஒன்றிய அரசு, ‘சிறந்த மாநில விருது’ கொடுத்திருக்கிறது.
மருத்துவத்துறைக்கான நோபெல் பரிசு விருது - 2023: 2023ம் ஆண்டில் மருத்துவத்துறையில், கதலின் கரிக்கோ மற்றும் ட்ர்யு வெயிஸ்மென் ஆகியோர், ‘நியூக்ளியோசைட் அடிப்படை மாற்றம் தொடர்பான கோவிட்-19க்கு எதிராக பயனுள்ள mRNA தடுப்பூசிகளை உருவாக்கியதிற்காக’ நோபெல் பரிசு பெற்றனர்.
மலேரியாவுக்கு தடுப்பூசி: சாதாரண கொசுக்களால் பரவுகின்ற உயிரைக் கொல்லும் டெங்கு காய்ச்சலை போலவே மலேரியா காய்ச்சலும் பல நூற்றாண்டு காலமாக மக்களை அச்சுறுத்தி வருகிறது. 2023ம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் 30 வருட அயராத உழைப்பால் மலேரியாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.
அதனுடன் இந்தியாவின் ஸீரம் இன்ஸ்டிட்யூட்டும் இணைந்து வருடத்திற்கு 10 கோடி தடுப்பூசிகளை தயாரித்து உலகத்திற்கு வழங்க இருக்கிறார்கள் என்பது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயமாகும். மூன்றாம் கட்ட பரிசோதனை முயற்சிகள் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, WHO அறிவிப்பின்படி 2024ம் ஆண்டு முதல் மலேரியாவிற்கான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும்.
2023 நவம்பர் முதல் நம் நாட்டில் சளி, காய்ச்சல் போன்ற தீவிர தொற்று உள்ளவர்களுக்கு மட்டும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிறருக்கு எளிதில் பரவக்கூடிய நோய்களான கோவிட், வயிற்றுப்போக்கு, காலரா, மலேரியா, காச நோய் மற்றும் தொழு நோய் போன்ற நோய்களை பரிசோதிக்கும் தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் அதுபோன்ற நோய் தொற்று இருப்பவர்களைப் பற்றிய விவரங்களை அரசுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அரசு கொண்டு வந்தது.
தமிழ்நாட்டில் தொழுநோய் Notifiable Disease ஆக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், ஒரிசாவில் 22.12.2023 அன்றுதான் தொழு நோய் Notifiable Disease ஆக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 2023ல் 200க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ம் தேதி உலகின் அரிய நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டிற்கான அரிய நோய் தினத்தின் கருப்பொருள் சேர் யுவர் கலர்ஸ் (share your colours) என்பதாகும்.
அரிய நோய்களால் அவதிப்படும் நோயாளிகள் மற்றும் அவர்களை கவனித்துக் கொள்ளும் கேர் டேக்கர்கள் சந்திக்கும் சவால்களை, துயரங்களைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை பரப்புவதற்காக கொடுக்கப்பட்டதுதான் இந்த வருடத்தின் கருப்பொருள். வண்ணமயமான உள்ளங்கை ரேகைகளின் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.