நாம் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் வருடம் முழுவதும் கால நிலையில், கோடை குளிர் என மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அப்படியான மாற்றம் நிகழும்போது சீதோஷ்ண நிலையில் ஏற்றத் தாழ்வு உண்டாகும். சீசன் மாறும்போது உடலின் மொத்த ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உணவில் கொண்டு வர வேண்டிய 7 மாற்றங்கள் பற்றி இந்தப் பதிவில் பாப்போம்.
கோடையிலிருந்து குளிர் சீசனுக்கு மாறும்போது நல்ல பசி, ஜீரணம் உண்டாகும். மனதுக்குப் பிடித்த, நல்ல கொழுப்புகள் அடங்கிய நெய், பாதாம் பருப்புகள், எள் விதைகள் போன்றவற்றால் தயாரிக்கப்படும் உணவுகளை உண்ணலாம். உடலுக்கு ஊட்டச் சத்து கிடைப்பதுடன் ஜீரணம் சிறப்பாக நடைபெறும்.
கோடையிலிருந்து குளிர் சீசனுக்கு மாறும்போது சருமம் மற்றும் முடிகளில் ஈரப் பசை நீங்கி அவை உலர்ந்த தன்மையுடன் காணப்படும். அதற்கு நிவாரணமாக நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வதும், இஞ்சி, பட்டை போன்ற உடல் உஷ்ணத்தைப் பராமரிக்க உதவும் ஸ்பைசஸ்களை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்ல பயன் தரும்.
ஆயுர்வேதா, சித்தா மற்றும் யுனானி மருத்துவப்படி, நல்ல கொழுப்புகள் மற்றும் வைட்டமின் E அடங்கிய பாதாம் பருப்புகள் எடுத்துக்கொள்வது சருமம் பளபளப்பு பெறவும் உடல் வயதான தோற்றம் தருவதைத் தவிர்க்கவும் உதவும். கால நிலை குளிராய் மாறும்போது இஞ்சி, பட்டை, லெமன் கிராஸ், லவங்கம், லெமன் ஜூஸ் மற்றும் தேன் கலந்த பொருட்களை உபயோகித்து தயாரிக்கப்படும் மூலிகை டீ அருந்துவது ஜீரணம் சிறப்பாகவும் கல்லீரல் ஆரோக்கியம் பெறவும் உதவும்.
உடலுக்கு உஷ்ணம் தரக்கூடிய இஞ்சி, கருப்பு மிளகு, பட்டை போன்ற மசாலாப் பொருட்களை உணவுடன் சேர்த்து சமைத்து உண்பது நல்ல பலன் தரும். இவை பலவீனமான நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்; நாள்பட்ட மலச்சிக்கலை நீக்கும்; ஜீரணத்தை சிறப்பாக்கும். சீசன் மாறும்போது அந்த சீசனில் உள்ளூரில் விளையக்கூடிய உணவுகளை உட்கொள்வது நமது உணவு முறையோடு ஒத்துப்போகும். மேலும், உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
ஆயுர்வேத மருத்துவ அறிவுறுத்தலின்படி பால் மற்றும் வெண்ணெய் போன்ற பால் பொருட்களை அளவோடு உட்கொள்வது நலம். ஏனெனில் அவை மூச்சுப் பாதையில் சளியை உற்பத்தி செய்யும். அதற்குப் பதில் ஜீவனிய கிரிதா (Jivaniya Ghrita) உபயோகிக்கலாம். இது பாதாம் பருப்புகளை வேக வைத்து அதனுடன் வேறு சில ஊட்டம் தரும் பொருள்கள் மற்றும் நெய் சேர்த்து தயாரிக்கப்படுவது. இதில் தேன் சேர்த்து உண்ணும்போது நாள்பட்ட இருமல் குணமாகும்.
மாறி வரும் சீசனுக்கு ஏற்ப நாமும் உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியம் காப்போம்.