நம் வயது அறுபதைக் கடக்கும்போது அதுவரை நம்மை ஆன்டி என்றும் அங்கிள் என்றும் கூப்பிட்டுக் கொண்டிருந்த இளசுகள் திடீரென பாட்டி என்றும் தாத்தா என்றும் கூப்பிட ஆரம்பிப்பர். அப்போதெல்லாம், 'நம் தோற்றம் என்ன அப்படியா மாறிவிட்டது' என எண்ணத் தோன்றும். வயது கூடினாலும் மனசு என்றும் மார்கண்டேயன் போல் இளமையாகவே இருக்கும். மனசுக்கு இணையாக தோற்றத்தையும் மாற்ற நாம் உட்கொள்ளும் உணவில் 9 வகை உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டியது அவசியம். அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
சுத்திகரிக்கப்பட்ட தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒயிட் பிரட் அதிகமான கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது. இதை உண்ணும்போது இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும். இதனால் கொலாஜனும் எலாஸ்ட்டினும் சேதமடைந்து சருமத்தில் தொய்வு உண்டாவதற்கு வாய்ப்பாகும்.
அதிகளவு ஆல்கஹால் அருந்துவது சருமத்தில் வறட்சியை உண்டுபண்ணி, சருமம் ஊட்டச்சத்து பெறுவதைத் தடுக்கும். இதனால் சருமத்தில் ஃபைன் லைன்ஸ் மற்றும் சுருக்கம் உண்டாகி, உடல் சீக்கிரமே வயதான தோற்றம் பெற்றுவிடும்.
பொரித்த உணவுகளை (Trans fats) உட்கொள்ளும்போது அவை உடலில் வீக்கம் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை உண்டுபண்ணுகின்றன. இதனாலும் சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு உடல் வயதான தோற்றம் அடையும்.
ஹைட்ரஜனேற்றம் கொண்ட எண்ணையை அதிகளவு கொண்டது மார்கரைன். இது சருமத்தை அல்ட்ரா வயலட் கதிர்களின் தாக்கத்தால் பாதிப்படையச் செய்யும்.
பேஸ்ட்ரீஸ் (Pastries) சுவையானதாக இருந்தாலும் அவற்றிலுள்ள அதிகளவு இனிப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் கிளைகேஷன் (Glycation) என்ற செயலில் ஈடுபட்டு சருமத்தையும் தசைகளையும் இணைக்கக்கூடிய கொலாஜன் என்ற புரதத்தையும் எலாஸ்டினையும் சேதமடையச் செய்யும். இதுவும் சருமத்தை தொய்வடையச் செய்து வயதான தோற்றம் பெற காரணியாகும்.
வெள்ளைச் சர்க்கரை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதோடு, உடலில் வீக்கங்களை உண்டுபண்ணும். மேலும், கொலாஜனை உடைத்து சருமத்தில் ஃபைன்லைன்ஸ் மற்றும் சுருக்கங்கள் உண்டாகச் செய்யும்.
அதிகமாகப் பதப்படுத்தப்படும் மாமிச வகைகள் புற்றுநோயை வரவழைக்கும் காரணிகளாகக் (Carcinogens) கருதப்படுகின்றன. இந்த உணவைத் தவிர்ப்பதால் செல்கள் மூப்படைவதையும் கேன்சர் வருவதையும் தடுக்கலாம்.
அதிகளவு சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட ஏரேட்டெட் (Aerated) பானங்கள் கொலாஜன் அளவில் ஏற்றத் தாழ்வை உண்டுபண்ணி சருமத்தில் முன்கூட்டியே சுருக்கங்கள் தோன்றச் செய்யும்.
பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளில் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் பாதுகாப்பான்கள் (Preservatives) அதிகம் உள்ளன. இவை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை உண்டுபண்ணி செல்கள் சிதைவுறவும் விரைவில் மூப்படைந்த தோற்றம் தரவும் செய்யும்.
மேற்கூறிய உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்து அல்லது குறைத்து, ஊட்டச்சத்து மிகுந்த முழு தானிய உணவு, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகை உணவுகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கி உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டால் என்றும் இளமைத் தோற்றம் கொண்டு இனிதாக வாழலாம்.