ஆரோக்கியம்

ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமான யோக முத்திரைகள்!

ஆர்.வி.பதி

மது கை விரல்கள் ஐந்தும் பஞ்சபூத சக்திகளைக் குறிக்கும். கை விரல்களில் கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிர விரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கின்றன.

நமது உடலானது பஞ்சபூத சக்தியால் ஆனது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த ஐந்து சக்திகளில் ஏதேனும் ஒரு சக்தியில் ஏற்றத்தாழ்வு மற்றும் குறைபாடுகள் ஏற்படும்போது நோய் எதிர்ப்பு தன்மை குறைந்து நமக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. கை விரல்களை இணைத்து ஒரு குறிப்பிட்ட முறையில் தொடர்பு ஏற்படுத்தி இக்குறையை நாம் மிகச் சுலபமாக நிவர்த்தி செய்து நல்ல ஆரோக்கியத்தை அடையலாம். இத்தகைய யோகக் கலையே ‘யோக முத்திரை’ எனப்படுகிறது. யோக முத்திரை உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரக் கூடியது. பரத நாட்டியம் ஆடுபவர்கள் இடையிடையே பல விதமான முத்திரைகளோடு அபிநயம் செய்வதைக் காணலாம். இத்தகைய முத்திரைகள் அவர்களுக்கு தொடர்ந்து சக்தியைத் தருகின்றன.

முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம். நல்ல பலனை அடைய தொடர்ந்து ஒரு முத்திரையை 24 நிமிடங்கள் இடைவிடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். இரண்டு கைகளால் செய்ய இயலாத சமயங்களில் ஒரே ஒரு கையினாலும் முத்திரை பயிற்சியை செய்யலாம்.

முத்திரைகளில் ஒரு கையால் செய்யக்கூடிய முத்திரைகள் இரண்டு கைகளாலும் செய்யக்கூடிய முத்திரைகள் என இரண்டு வகைகள் உள்ளன. சில முத்திரைகளை ஒரே ஒரு கையினால் செய்யலாம். ஆனால் சில குறிப்பட்ட முத்திரைகளை இரண்டு கைகளையும் வைத்தே செய்ய வேண்டும். உதாரணமாக லிங்க முத்திரை, சங்கு முத்திரை, சுரபி முத்திரை போன்ற முத்திரைகளை இரண்டு கைகளை உபயோகித்தே செய்ய முடியும். நாம் பெரியவர்களைக் கண்டால் இரண்டு கைகளையும் ஒன்றாகக் கூப்பி வணங்குகிறோமல்லவா? இதற்குப் பெயர் அஞ்சலி முத்திரை.

நம்முடைய உடலில் அதிசயிக்கத்தக்க மாற்றங்களை இம்முத்திரை பயிற்சி ஏற்படுத்தும். உடலுக்குள் சக்தியை உருவாக்கி நமது உடல் மற்றும் மனம் நல்ல முறையில் இயங்கச் செய்யும் ஆற்றல் மிக்கது யோக முத்திரைக் கலை. பல வகையான உடல் வியாதிகளுக்கு உடனடித் தீர்வையும் இவை ஏற்படுத்துகின்றன. ஹார்ட் அட்டாக் முதல் தலைவலி வரை பல்வேறு வியாதிகளை முற்றிலும் இவை குணப்படுத்துகின்றன.

முத்திரைப் பயிற்சியானது செய்வதற்கு மிகவும் எளியது. இந்த பயிற்சியானது மனத்தை லேசாக்கும் வல்லமை பெற்றது. முத்திரையைச் செய்ய பத்மாசனம் மிகவும் சிறந்தது. முத்திரைப் பயிற்சியை ஆரம்பிக்கும் முன்பாக இரண்டு அல்லது மூன்று முறைகள் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். முறையாக யோக முத்திரைகளைச் செய்து பழகினால் முழுமையான பலனை அடையலாம். ஒரு யோகக்கலை பயின்ற குருவிடம் இத்தகைய முத்திரைகளை முழுமையாகக் கற்று நீங்கள் தினமும் யோக முத்திரைகளைச் செய்து நலமாக மன அமைதியோடு வாழலாம்.

நீங்களே எளிதாகச் செய்யக் கூடிய நான்கு முத்திரைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

கை பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்து மற்ற மூன்று விரல்களையும் நேராக வைத்துக் கொண்டால் அது ஞான முத்திரை.

கை பெருவிரலையும் நடுவிரலையும் இணைத்து வைத்து மற்ற மூன்று விரல்களையும் நேராக வைத்துக் கொள்ளுங்கள். இது ஆகாய முத்திரை.

பெருவிரலின் நுனியை மோதிர விரலின் நுனிப்பகுதியோடு சற்று அழுத்திப் பிடித்தபடி இணைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களை நேராக வைத்துக் கொண்டால் அது பிருத்வி முத்திரை.

கை பெருவிரலையும் சுண்டு விரலையும் ஒன்றோடு ஒன்று இணைத்து மற்ற மூன்று விரல்களையும் நேராக வைத்துக் கொண்டால் அது வருண முத்திரை.

மேற்காணும் நான்கு முத்திரைகளும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுவதும் எளிது. பழகுவதற்கும் மிகவும் எளிமையானவை. பெருவிரலோடு தொடர்ச்சியாக ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல் போன்றவற்றை ஒவ்வொன்றாக மாற்றி வைத்தால் நான்கு முத்திரைகளையும் செய்து முடிக்கலாம். எனவே, தொடக்கத்தில் நீங்கள் இந்த நான்கு முத்திரைகளையும் அவற்றின் பெயர்களையும் நினைவில் வைத்துக் கொண்டு பழகுங்கள். பின்னர் ஒரு குருவின் மேற்பார்வையோடு பிற முத்திரைகளைப் பயின்று தினமும் முத்திரைகளைப் பழகலாம். முத்திரை பயிற்சிகளை உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் எப்போதும் உங்கள் நண்பனாகவே இருக்கும்.

இந்த உணவுகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டா ஆபத்தா? நோட் பண்ணணுமே!

சிறு மாதுளை போல் இருக்கும் மெட்லர் பழம்!

Wow… Wow… செஸ்வான் நூடுல்ஸ் ரெசிபி! 

பணப்பயிர் சணலின் பயன்பாடுகள் தெரியுமா?

உடலில் மாயாஜாலம் செய்யும் வெண்டைக்காய் நீரின் 5 பலன்கள்!

SCROLL FOR NEXT