பெருங்காயம் 
ஆரோக்கியம்

செரிமானத்தை சிறப்பாக்கும் பெருங்காயத்தின் பயன்கள்!

சேலம் சுபா

நாம் உண்ணும் உணவுகளில் இயற்கை மணத்துக்காக சேர்க்கப்படும் முக்கியப் பொருட்களில் ஒன்று பெருங்காயம். இதை சேர்ப்பதால் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வராது என்பார்கள். பெருங்காயம், ‘ஃபெருலா ஃபொட்டிடா’ அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது ஈரான் நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது. மேலும், உலகின் பல நாடுகளில் பல்வேறு மருத்துவக் காரணங்களுக்காகவும், பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படும் பெருங்காயம் உலகில் 40 சதவீதம்  இந்தியாவில் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ‘உணவுகளின் கடவுள்’ என்று பாரசீக மக்கள் இதனை ஒரு காலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதமாக பெருங்காயம் சமையலில் சேர்க்கப்படுகிறது. நம் தமிழ்நாடு உணவுகளான சாம்பார், ரசம், புளிக்காய்ச்சல் போன்றவற்றில் அவசியம் பெருங்காயம் சேர்க்கப்பட்டு மணக்கும். மேற்கத்திய உணவுகளிலும் பெருங்காயம் என்பது மிகவும் விரும்பத்தக்க ஒரு சுவையை கொண்டிருப்பதாக உணவு குறித்த எழுத்தாளர்கள் விவரிக்கின்றனர்.

நல்ல, தரமான பெருங்காயத்தை எப்படி தேர்வு செய்வது? வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும் பெருங்காயமே சிறந்தது. கறுப்பாக இருந்தால் தவிர்த்து விடுங்கள். இதிலும் தற்போது சில தாவர பிசின்கள், ஸ்டார்ச்மாவுஷ போன்றவை சேர்க்கப்பட்டு கலப்படத்துடன் விற்கப்படுகிறது. பெருங்காயத்தின் வகைகளான பால் பெருங்காயம் மற்றும் சிவப்பு பெருங்காயத்தில் பால் பெருங்காயம்தான் அதிக மதிப்புமிக்கது. இதுதான் மிகுந்த வாசனையுடனும், காரத்துடனும் இருக்கும். பெருங்காயத்தில் உள்ள ஒலியோ ரெசின் எனும் வேதிப்பொருள் உடலுக்கு நன்மை தரக்கூடியது.

காரமும், கசப்பு சுவையும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் எளிதில் ஜீராணிக்கச் செய்து செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும், இதில் பல மருத்துவ குணங்கள் இருப்பது ஆராய்ச்சிகள் மூலம் தெரிகிறது. குறிப்பாக, பன்றிக் காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின்/சைமடின் (Amandatine / Symadine) வைரஸ் மருந்துகளைப் போல, பெருங்காயமும் வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனத் தைவானில் உள்ள ஆய்வாளர்கள் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளி பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியுடன் கால்சியமும் கிடைக்கும். லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக் காய்ச்சல் நுண்ணுயிரியையும் வர விடாமல் தடுக்கலாம்.

தற்போது கட்டிப்பெருங்காயத்துடன் தூள் பெருங்காயமும் பயன்படுத்த எளிதாகக் கிடைக்கிறது. காற்றில் வைத்தால் விரைவில் கெட்டியாவதுடன்  மணமும் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளை அல்லது டப்பாவில்  போட்டு வைத்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம். மேலும், மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து சமைக்கும்போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது எனலாம். எனினும் அளவுக்கு மீறினால் உணவின் சுவை கெட்டு விடும் வாய்ப்பு உள்ளது.

ஆகவே, சுவையும் மணமும் மட்டுமல்ல, நமது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் இதை அளவுடன் பயன்படுத்தி நலம் பெறுவோம்.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT