‘பல் போனால் சொல் போச்சு’ என்பார்கள். பற்களின் ஆரோக்கியத்தை காத்தாலே உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். பல்வேறு பல் பிரச்னைகளில் சொத்தைப் பல் பிரச்னை முக்கியமானது. சொத்தை பற்கள் ஏற்படுவது என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய பொதுவான பிரச்னையாகும்.
சொத்தை பல் ஏன் வருகிறது என்றால், பற்களின் மேலே படியும் காரை அல்லது உண்ட உணவின் மிச்சம் பற்களில் இருந்து அதன் மூலம் உண்டாகும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் அமிலம் பற்களை பாதித்து பல் சொத்தையை உருவாக்குகிறது. சொத்தை பற்களால் வலி, வீக்கம், பல் கூச்சம், ஈறுகளில் இருந்து இரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
பல் சொத்தை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் இனிப்புகளை அதிகமாக சாப்பிடுவதுதான். அதிலும் குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், குக்கீஸ், கேக் போன்ற பேக்கரி ஐட்டங்கள். இவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு வாயில் உள்ள பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து லாக்டிக் அமிலத்தை சுரக்கின்றது. இந்த அமிலம் பல் எனாமலை அரித்து பற்களை சிதைக்கும். இதன் விளைவாகத்தான் பற்கள் சொத்தையாகின்றன. சிறு குழந்தைகள் இரவில் புட்டிப்பாலை குடித்தபடியே தூங்கி விடுவார்கள். அப்போது பற்களில் பால் தங்கி சொத்தையை ஏற்படுத்தும்.
பற்களை சுத்தமாக பராமரிக்க தவறினாலும் பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும். புகைப்பிடிப்பது, பான் மசாலா போடுவது, தாம்பூலம் தரிப்பது, அதிக அளவில் காப்பி, டீ குடிப்பது போன்ற பழக்கங்களால் பற்களில் கரை படிவதுடன் பாக்டீரியாக்கள் வளர்ந்து சொத்தையை உருவாக்கும்.
பல் சொத்தைக்கு சிகிச்சை: ஆரம்ப நிலையில் உள்ள பல் சொத்தைகளுக்கு அந்த இடத்தை சுத்தம் செய்து சிமெண்ட் கொண்டு அடைத்து விடுவார்கள். முன்பெல்லாம் பல் வலிக்கு மாத்திரைகள் கொடுத்து சரியாகவில்லை என்றால் பல்லை எடுத்து விடுவார்கள். ஆனால், இப்பொழுது ஃபில்லிங் எனப்படும் சிகிச்சை உள்ளது.
பல் சொத்தை பல்லின் வேர் வரை சென்றிருந்தால் அதற்கு ஈறுகளில் ஊசி செலுத்தி அப்பகுதியை மரத்துபோகச் செய்து பல்லில் உள்ள சொத்தையை முற்றிலும் அகற்றிவிட்டு அங்குள்ள நரம்பை வெட்டி முழுவதுமாக சுத்தம் செய்து மருந்து கொண்டு நிரப்பி மேலே ‘கேப்’ போட்டு விடுவார்கள். இதனால் பல் சொத்தை சரியாவதுடன் நிரந்தரமாக அப்பகுதியில் வலி எதுவும் ஏற்படாது. இது சிறிது செலவு அதிகமானாலும் நிரந்தரத் தீர்வாக அமைகிறது. மற்றொரு முறையாக, சொத்தைப்பல்லை எடுத்து விட்டு, அந்த இடத்தில் செயற்கையாக பல்லை பொருத்திக் கொள்வது.
பற்சிதைவு வரும் முன்னே காப்பதுதான் புத்திசாலித்தனம். இதற்கு தினமும் உணவு உண்ட பின் வாய் கொப்பளிப்பதும், சேஃப்டி பின், குச்சி கொண்டு பல் ஈறுகளை குத்தி உணவுத் துணுக்குகளை எடுப்பதும், குளிர்பானங்களை குடிப்பதையும் தவிர்ப்பது நல்லது.