Do you have to remove the seeds and cook the tomatoes? https://tamil.boldsky.com
ஆரோக்கியம்

தக்காளி விதைகளை எடுத்துவிட்டுத்தான் சமைக்க வேண்டுமா?

சேலம் சுபா

ம் அன்றாட சமையலில் அதிகமாகப் பயன்படுத்துவது தக்காளிதான். சிற்றுண்டி என்றாலும் சாப்பாடு என்றாலும் தக்காளி இல்லாத உணவை பார்க்க முடியாது. காரணம், தக்காளியின் சுவை. இனிப்பும் புளிப்பும் கலந்த தக்காளியை சிலர் அப்படியே சாப்பிடுவார்கள். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன என்றாலும், தக்காளியில் உள்ள விதைகளை நீக்கிவிட்டே சமைக்க வேண்டும் என்பதில் பலருக்கும் சமீபகாலமாக குழப்பம் எழுகிறது. அந்தக் காலத்தில் தக்காளி விதைகளை நீக்காமல்தானே சமைத்தனர். இப்போது மட்டும் ஏன் நீக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தக்காளி விதைகளை ஏன் நீக்க வேண்டும்? யார் தக்காளியை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

தக்காளியில் நிறைந்திருக்கும் வைட்டமின் C நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பற்கள், ஈறுகள் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்டுகள் நம் உடலின் செல்களை மேம்படுத்துவதால் உடல் உறுப்புகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் அபாயத்தை குறைக்கிறது. இதில் உள்ள தாதுக்கள் சருமத்தை மேம்படுத்தி பொலிவாக்குகிறது. மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏவைப் பாதுகாக்கிறது. இந்த டிஎன்ஏதான் நமது சருமம் வயதாவதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது. தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப்படுத்துவதாக அறியப்படுகிறது. இதுபோன்ற பல சத்துக்களை அளிக்கும் தக்காளியை அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது சில பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் உண்மை.

இந்தச் செடியின் இலைகள் மற்றும் தண்டுகளில் சோலனைன் என்ற அல்கலாய்டு வகை உள்ளது. தக்காளியில் உள்ள ஆல்கலாய்டு தாவரத்தை உருவாக்க உதவுகிறது. பழங்களைப் போலவே, விதைகளும் சருமத்தையும் இதயத்தையும் நன்றாக வைத்திருக்க உதவுகிறது. இதன் காரணமாக, தக்காளியை விதைகளுடன் உட்கொள்வது ஆரோக்கியத்தை பாதிக்காது. ஆனால், இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள் உள்ளவர்கள் சமைக்காத பச்சை தக்காளியையும் தக்காளி விதைகளையும் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

அதிலுள்ள அமிலத்தன்மை நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானத்தில் சில பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, செரிமான பிரச்னைகள், அசிடிட்டி போன்ற பிரச்னைகள் நீண்ட நாட்கள் இருப்பவர்கள் தக்காளியை அதிகம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இது சிறிய அளவில் இருந்தாலும் நம் உடலுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. சமைக்கும்போது விதைகளை நீக்கிவிட்டு சமைப்பதால் செரிமான பிரச்னைகளுடன் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளையும் தவிர்க்கலாம்.

விதைகளை நீக்கிவிட்டு சமைப்பதால் அதன் சுவையில் எந்த மாற்றமும் இருக்காது. எனவே, நீங்கள் தக்காளி விதைகளை நீக்க விரும்பினால் தாராளமாக நீக்கிவிட்டு பயன்படுத்தலாம். உடல் ரீதியான பிரச்னைகள் எதுவும் உங்களுக்கு இல்லையெனில் விதைகளோடும் தக்காளியை சமையலில் சேர்ப்பது தவறில்லை.

சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் உணவில் தக்காளியை சேர்க்கலாமா எனும் சந்தேகம் உள்ளது. மருத்துவர் பரிந்துரையுடன் சேர்த்துக்கொள்ளலாம். காரணம், கிட்னியில் உருவாகும் கல், கால்சியம் ஆக்ஸலேட் அதிகமாவதால் உருவாகின்றன. நாம் சாப்பிடும் பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் கால்சியம் நிறைந்துள்ளது.

அதேபோல், தக்காளி விதைகளில் இந்த ஆக்ஸலேட் அதிகமாக உள்ளது. விதை இல்லாத தக்காளிகளில் ஆக்ஸலேட் இல்லாமல் இருப்பதால் பெங்களூர் தக்காளியையும் மரபணு மாற்றப்பட்ட ஹைபிரிட் தக்காளிகளிலும் விதை இல்லாததால் ஆக்ஸலேட் இல்லை என்பதால் அதை உபயோகிக்கலாம் என்கின்றனர். ஆனால், நாட்டுத்தக்காளியில் உள்ள சத்துக்கள் இதில் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

தக்காளியை விதையை எடுத்தாலும், எடுக்காமல் சமைத்தாலும் உடலில் பாதிப்பு உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக எடுக்காமல் இருப்பதே என்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

SCROLL FOR NEXT