‘மருந்து மாத்திரைகளால்தான் வண்டியே ஓடுது ’ என்று தற்போது பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.அந்தளவுக்கு மாத்திரைகள் பலருடைய வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளன. மாத்திரைகளை உண்பதே அவை விரைந்து பலன் தர வேண்டும் என்பதற்காகத்தான். இது குறித்து அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனை விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி ஒருவர் நின்றபடியே இருந்தால் சாப்பிட்ட மாத்திரைகள் பலன் தர 23 நிமிடங்கள் ஆகும், இடது புறம் சாய்ந்து படுத்தால் உண்ட மாத்திரை பலன் தர 100 நிமிடங்கள் ஆகும். இதுவே வலது பக்கம் சாய்ந்து படுத்தால், மாத்திரைகள் 10 நிமிடத்தில் பலன் தரும். என்பது தெரிய வந்துள்ளது. மாத்திரைகளை தண்ணீரை பயன்படுத்தி விழுங்குவதே சரியானது. தண்ணீரை தவிர்த்து, வேறு பானங்களைப் பயன்படுத்தி மாத்திரைகளை விழுங்கினால் சில மாத்திரைகளின் பலன் குறையும்.
சூடான பானங்களை மாத்திரைகளை விழுங்க உபயோகிப்பதும் நல்லதல்ல. சூடான பானங்களுடன் மாத்திரைகளை விழுங்கும்போது மாத்திரையின் மேல் பகுதி விரைவிலேயே உருகி விடும். வயிற்றை சென்றடையும் முன்பே மாத்திரை உருக அதனால் வயிற்று வலி தோன்றக்கூடும்.
பழச்சாற்றுடன் மாத்திரைகளை விழுங்கினால் சில நேரங்களில் மாத்திரைகளின் சக்தி குறைந்துபோகும். அதற்குக் காரணம் பழச்சாற்றில் இருக்கும் அமிலத்தன்மை பாலோடு மாத்திரைகளை விழுங்குவதும் நல்லதல்ல. ஆஸ்பிரின், ஆன்டிபயாடிக்குகள், இருமல் மருந்து போன்றவற்றை பாலோடு சாப்பிட்டால் முழுமையான பலனைத் தராது. இரும்புச்சத்து மாத்திரைகளை விழுங்கிய பிறகு பால் சாப்பிடக்கூடாது. இதனால் பலன் இல்லாமல் போய் விடும். இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன்பு ஒரு மணி நேரம், பின்னர் இரண்டு மணி நேரம் பால் சாப்பிடக்கூடாது.
அதனால் தண்ணீரை பயன்படுத்தியே மாத்திரைகளை சாப்பிடுங்கள் என்கிறார்கள். மாத்திரைகளை குளிர்ந்த நீரில் சாப்பிட வேண்டாம். மருந்து, மாத்திரைகள் சாப்பிட்ட பின்னர், உடனே படுத்துவிடாதீர்கள். அதேபோல், மாத்திரைகளை சாப்பிட்ட உடனேயே உட்கொள்வது கூடாது. ஏனெனில், இவை தவறான காம்பினேஷனாக இருப்பதுடன், ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. வெறும் வயிற்றில் போட வேண்டிய மாத்திரையை போட்டுவிட்டு சிறிது நேரம் கழித்த பின்பே சாப்பிட வேண்டும்.
மற்றவர்களின் மாத்திரைகளை போடுவதை தவிர்க்க வேண்டும். ஒரே அறிகுறியாக இருந்தாலும், வீரியம் ஒருவருக்கொருவர் மாறுபடும். ஆதலால் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகளை மற்றவர்கள் போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சளி காய்ச்சல் தடுப்பு மருந்து மாத்திரைகளை மாலை நேரத்தை விட காலையில் எடுத்துக்கொள்ளவது நல்ல பலனைத் தரும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முற்பகல் 11 மணிக்கு முன்பே தடுப்பு மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கப்பட்டவர்களுக்கு உடலில் காணப்பட்ட நோய் எதிர்ப்புப் பொருட்கள் மிகவும் வீரியமானவையாக இருப்பதை இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. இரவில் படுக்கச் செல்லும் முன் எடுத்துக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்கள் ஸ்பெயின் நாட்டின் வீகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
கால் வலி, கைவலி, எலும்பு பிரச்னைகளுக்கு பொதுவாக டாக்டர்கள் பரிந்துரைப்பது கால்சியம் மாத்திரைகளைத்தான். இந்த கால்சியம் மாத்திரைகளை தினமும் 1400 மி.கி. மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள இருதய பாதிப்பு வரலாம் என்கிறார்கள். அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அதேபோல், ஆன்டி பயாடிக் மற்றும் வலி மாத்திரைகளையும் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். மீறினால் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு வர வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.