தாவரப் பொருளை மூலமாகக் கொண்டு தயாரிக்கப்படும் பிரசித்தி பெற்ற மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பால் வகைகளில் ஒன்று ஓட்ஸ் மில்க். இதை தயாரிப்பது மிகவும் எளிது. ஒரு ஹை பவர் பிளென்டரில் (blender) ஓட்ஸ் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடித்து வடிகட்ட ஓட்ஸ் மில்க் ரெடி. தேவைப்பட்டால் சிறிது உப்பு, மேப்பிள் சிரப், வென்னிலா எஸ்ஸன்ஸ் சேர்த்துக் கலந்து குளிரூட்டி அருந்த, சுவை சூப்பராகும். இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகள் எத்தனையென்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும். ஓட் மில்க்கில் பீட்டா க்ளூக்கன் (Beta Glucan) மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை உயர் இரத்த அழுத்தம் என்னும் உடல் நிலைக் கோளாறு உண்டாகும் அபாயத்தைத் தடுக்கவல்லவை.
ஓட்ஸ் மில்க்கில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் பயோ ஆக்ட்டிவ் பெப்டைட்ஸ் அதிகம் உள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. வைட்டமின் D மற்றும் வைட்டமின் B12 ஆகியவற்றால் செரிவூட்டப்பட்ட ஓட்ஸ் மில்க் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
ஓட்ஸ் மில்க் உடற்பயிற்சிக்குப் பின் ஏற்படும் சோர்வை நீக்க வல்லது. சோர்வை உண்டாக்கக் காரணியாக உடலில் உற்பத்தியாகும் லாக்டிக் அமிலம் போன்றவற்றின் அளவைக் குறைத்து சோர்வை நீக்க உதவுகிறது.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் அருந்த ஓட் மில்க் ஒரு சிறந்த தேர்வாகும். குளூட்டன் சென்ஸிட்டிவிட்டி உள்ளவர்களுக்கும் ஓட்ஸ் மில்க் ஒரு சிறந்த மாற்றாகும்.
ஓட்ஸ் மில்க் LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கக் கூடியது. ஓட்ஸ் மில்க்கில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவுகின்றன. மேலும், இரத்த சோகை எனப்படும் அனீமியா நோயையும் வராமல் தடுக்க உதவுகிறது.
ஓட்ஸ் மில்க்கில் காபி, டீ தயாரிக்கலாம். மாட்சா லாட்டே, ஓட் மீல், ஓவர் நைட் ஓட்ஸ், பிரட், மஃப்பின், பேக்ட் (baked) ஓட் மீல் போன்ற உணவுகளின் தயாரிப்புகளிலும் இதை உபயோகிக்கலாம்.