லெட்டூஸ் என்பது சாலட்களில் முக்கியப் பொருளாக சேர்க்கப்படும் ஒரு வகை பச்சை இலைக் காய்கறி ஆகும். இதில் அடங்கியிருக்கும் ஊட்டச் சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் அளவில் அடங்காதவை. எடைக் குறைப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை உடல் ஆரோக்கியத்துக்கு உதவக் கூடியது இது. லெட்டூஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
லெட்டூஸ் தரும் கலோரி அளவு மிகவும் குறைவு. எடைக் குறைப்பில் கவனம் செலுத்துபவர்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய சரியான உணவு இது. இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்தானது ஜீரண மண்டல உறுப்புகளின் சிறப்பான இயக்கத்திற்கும், உணவு நல்ல முறையில் செரிமானம் ஆவதற்கும் பெரிதும் உதவுகிறது.
லெட்டூஸில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாத்து, உடலின் நலனுக்கும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவி புரிகிறது. லெட்டூஸில் நிறைந்திருக்கும் வைட்டமின் C மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீங்கு விளைவிக்கும் ஃபிரிரேடிக்கல்களுக்கு எதிராகப் போராடி நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்க உதவுகின்றன; நோயெதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கின்றன.
உடலை நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிக்கத் தேவைப்படும் வைட்டமின் C, K, A மற்றும் பொட்டாசியம், ஃபொலேட் போன்ற கனிமச் சத்துக்களும் லெட்டூஸில் அதிகம் நிறைந்துள்ளன. பொட்டாசியம் சத்தானது இரத்த அழுத்தத்தை சமநிலையில் பராமரிக்க உதவி புரிந்து உயர் இரத்த அழுத்தம் உண்டாகும் அபாயத்தைத் தடுக்கிறது; இதனால் இதய ஆரோக்கியம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது.
இதிலுள்ள வைட்டமின் K எலும்புகளுக்கு ஆரோக்கியமும் வலுவும் தந்து ஆஸ்ட்டியோபொரோசிஸ் நோய் வராமல் பாதுகாக்கிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உண்டாகும் சிதைவுகளை குணப்படுத்தவும், பளபளப்புடன் இளமையான தோற்றம் பெறவும் உதவி புரிகின்றன.
லெட்டூஸில் லாக்டுகேரியம் (Lactucarium) என்றொரு கூட்டுப்பொருள் உள்ளது. இது சிறிதளவு மயக்க உணர்வு தரக்கூடியது. இது இரவில் அமைதியான ஆழ்ந்த உறக்கம் பெற உதவுகிறது.
நாமும் லெட்டூஸை சூப், சாலட், சாண்ட்விச் போன்றவற்றில் சேர்த்து அடிக்கடி உட்கொண்டு உடல் ஆரோக்கியம் பெறுவோம்.