சீசனல் ஃபுரூட்டான மாம்பழம், நாம் அனைவருக்குமே பிடித்தமான ஒன்றாகும். அதில் வைட்டமின் A, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடனடி சக்தி தரக்கூடிய இயற்கை இனிப்புச் சத்து, சரும ஆரோக்கியம் மேம்படவும், கேன்சர் நோயை எதிர்த்துப் போராட உதவும் குணம் ஆகிய நற்பண்புகள் அடங்கியிருப்பது அனைவரும் அறிந்தது. இந்தப் பழத்தின் கொட்டைக்குள் இருக்கும் பருப்பில் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மாம்பருப்பில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உண்டாகும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி கேன்சர் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது.
இதில் டயட்டரி ஃபைபர் அதிகம் உள்ளது. இது ஜீரண மண்டல உறுப்புகளின் இயக்கத்தை ஊக்குவிக்கவும் மலச் சிக்கலை நீக்கவும் உதவுகிறது. மாம்பழத்தின் விதைகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போராடி உடலைக் காக்கவும், உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கவும் உதவுகின்றன.
மாங்கொட்டை விதையில் உள்ள நார்ச் சத்துக்கள் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து, அந்த நாளில் உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைப்பதால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு குறைகிறது. சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய வைட்டமின் E சத்து மாங்கொட்டையின் விதையில் உள்ளது. இது சூரியக் கதிர்களின் அல்ட்ரா வயலட் ரேடியேஷனால் சருமத்தில் ஏற்படும் கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது.
மாங்கொட்டை விதைகளை காய வைத்து பொடிபண்ணி உணவுகளின் தயாரிப்பில் சுவையூட்டியாக சேர்க்கலாம். அந்தப் பொடி கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் இரத்த ஓட்டத்தை சிறப்பாக்கவும் உதவும். இந்த விதைகளை நெருப்பில் சுட்டு அப்படியே சாப்பிடவும் செய்யலாம்.
மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு அதன் விதைகளைத் தூக்கி எறியாமல், அதனுள்ளே இருக்கும் பருப்பையும் உண்டுதான் பார்ப்போமே!