Causes of preterm birth 
ஆரோக்கியம்

குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள் தெரியுமா?

தி.ரா.ரவி

வ்வொரு ஆண்டும் நவம்பர் 17ம் தேதி உலகக் குறை பிரசவ தினம் அனுசரிக்கப்படுகிறது. குறை பிரசவம் தொடர்பான இறப்புகள், சவால்கள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான வழிகளை உள்ளடக்கிய விழிப்புணர்வு ஏற்படுவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

குறை பிரசவத்திற்கான காரணங்கள்: பொதுவாக, முழு கர்ப்ப காலம் என்பது 37லிருந்து 42 வாரங்களுக்கு இடையில் நீடிக்கும். 37 வாரங்களுக்கு முன்னதாக குழந்தை பிறக்கும்போது அது குறை பிரசவம் எனப்படுகிறது. குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் பல சிறப்பு பிரச்னைகளை எதிர்கொள்கின்றன.

தாயின் சுகாதார நிலைமைகள்: ஒரு பெண்ணிற்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு கோளாறுகள் போன்ற நீண்ட கால உடல்நல பிரச்னைகள் மற்றும் கருப்பை அல்லது சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்றுகள் குறை பிரசவத்திற்கு காரணமாக அமையலாம். தாயின் உடலில் அதிகரித்த உடல் அழுத்தம், வளரும் கருவுக்கான இடத்தைக் குறைப்பதால் இரட்டை குழந்தைகள், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை சுமப்பது குறை பிரசவத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

கருப்பையின் திறன்: கருப்பையின் வடிவத்தில் ஏற்படும் அசாதாரணமான கட்டமைப்புகள், கருப்பையின் முன்கூட்டியே விரிவடையும் திறன், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஹார்மோன் அளவை சீர்குலைக்கும் நிலைமைகளும் குறை பிரசவத்திற்கு பங்களிக்கும்.

வாழ்க்கை முறைக்காரணிகள்: புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருள் பழக்கம், மோசமான ஊட்டச்சத்து மற்றும் போதிய மகப்பேறு பராமரிப்பின்மை ஆகியவை தாயின் ஆரோக்கியத்தையும் குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கலாம்.

உளவியல் காரணங்கள்: தனிப்பட்ட அல்லது சமூகப் பொருளாதார காரணங்களால் ஏற்படும் உணர்ச்சி மற்றும் உளவியல் மன அழுத்தம் சில சந்தர்ப்பங்களில் உடல் ரீதியான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

வயது: மிக இளம் வயதில் பிரசவிப்பது அல்லது 35 வயதுக்கு மேற்பட்ட பிரசவம் மற்றும் முதல் பிரசவத்திற்குப் பிறகு அடுத்ததாக விரைவில் கர்ப்பமாக ஆகும் பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்படலாம்.

குறை பிரசவக் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்:

ஆரோக்கியப் பிரச்னைகள்: குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நுரையீரல் முழுமையாக வளர்ச்சி அடையாமல் இருப்பதால் சுவாசக் கோளாறு ஏற்படலாம். உடல் வெப்பநிலை பராமரிப்பதில் சிரமம் இருக்கும். சில குழந்தைகளுக்கு மூளையில் இரத்தப் போக்கு ஏற்படக்கூடிய நரம்பியல் சிக்கல்களும் மூளைக் கோளாறுகளும் ஏற்படலாம். இது பின்னாளில் கற்றல் குறைபாடுகள், நடத்தை சிக்கல்கள் உடல் இயக்கங்களில் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தலாம். பார்வைக் கோளாறு, காது கேளாமை, தீவிர குடல் நோய் மற்றும் இதயத்தில் உள்ள இரத்த நாளம் சரியாக மூடப்படாததால் இதயப் பிரச்னைகளும் ஏற்படலாம்.

உணவளிப்பதில் சிரமங்கள்: குறை பிரசவ குழந்தைகளுக்கு தாய்ப்பால் அல்லது புட்டி பால் கொடுப்பதற்கு சாத்தியமான நிலைமைகள் இல்லாமல் போகும். இதனால் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனம் அடைந்து தொற்று நோய்களுக்கு வழிவகுத்து விடும்.

இதைத் தவிர்ப்பதற்கு வழிமுறைகள்: கர்ப்பகாலம் முழுவதும் தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, சாத்தியமான சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கு ஏற்ப தாய் மற்றும் கருவின் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு கோளாறுகள் போன்ற நிலைமைகள் கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் நன்கு நிர்வகிக்கப்பட வேண்டும்.

கர்ப்பிணிகள் சீரான உணவை பராமரித்தல், மிதமான உடற்பயிற்சி, ஆரோக்கியமற்ற பழக்கங்களை தவிர்த்தல், யோகா, தியானம் போன்ற தளர்வு பயிற்சிகள், வைட்டமின்கள் போலிக் அமிலம் சாப்பிடுதல், தடுப்பூசிகள், அதிக உடல் எடை தூக்குதல், அதிக உடல் செயல்பாடுகளைத் தவிர்த்தல் போன்றவை குறைப்பிரசவ அபாயத்தை குறைக்க உதவும்.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT