நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும், ஜீரண மண்டல உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கவும், எடை குறைக்கவும் போன்ற காரணங்களுக்காக சில தினங்கள் அல்லது அதிகபட்சம் ஒன்றிரண்டு வாரங்கள் பழச்சாறு மற்றும் காய்கறி ஜூஸ்களை மட்டுமே அருந்தி உடலைப் பராமரிப்பதையே, 'ஜூஸ் கிளீன்ஸ்' என்கின்றனர். ஜூஸ் ஃபாஸ்ட் (Juice Fast) எனவும் அழைக்கப்படும் இந்த முறையைப் பின்பற்றுவதால் கிடைக்கும் ஆறு ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
ஜூஸ்களில் உள்ள வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் முழு ஆரோக்கியத்திற்கும், நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக்கவும் உதவுகின்றன. இந்த முறையில் கல்லீரலுக்கு அதிக ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதால் அதன் இயக்கம் சிறப்படைவதாகவும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளாததால் கல்லீரலில் நச்சுக்கள் சேர்வது தடுக்கப்பட்டு கல்லீரல் சுத்தமடைவதாகவும் ஜூஸ் கிளீன்ஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இம்முறையைப் பின்பற்றும் குறுகிய காலத்தில் குறைந்த அளவு கலோரி கொண்ட உணவுகளே உட்கொள்ளப்படுவதால் எடைக் குறைப்பிற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. எடையிழப்பு நீரிழப்பினல் மட்டுமே நிகழ்கிறது. கொழுப்பு குறைவதால் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறையைப் பின்பற்றுபவர்கள், மற்ற நாட்களில் உட்கொள்ளாத பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளின் சாற்றை பருகும் வாய்ப்பைப் பெறுகின்றனர். பழம் மற்றும் காய்கறி சாறுகள் திரவத் தன்மை மட்டுமே கொண்டுள்ளதால், ஜீரண மண்டல உறுப்புகளுக்கு உணவுகளை உடைத்து செரிமானத்துக்கு தயார்படுத்தும் வேலை குறைகிறது; அதனால் அவை இலகுவான உணர்வைப் பெறுகின்றன.
ஜூஸ் கிளீன்ஸ் காலத்திலும் அது முடிந்தபின்னும், மனத் தெளிவு மற்றும் வேலைகளில் கவனம் போன்றவை அதிகரித்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். நீர்ச்சத்தும் பிற ஊட்டச் சத்துக்களும் அதிகளவில் உடலில் சேர்ந்ததே இதற்கான காரணமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குறிப்பிட்ட உடல் நிலைக் கோளாறு உள்ளவர்கள், நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஆகியோர் மருத்துவரைக் கலந்தாலோசித்த பின் 'ஜூஸ் கிளீன்ஸை' பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நன்றி: wionews.com