சிலருக்கு தாங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரைகள் ஒத்துக்கொள்ளாமல் போய் விடும். அது உடலில் சில அறிகுறிகள் மூலம் வெளிப்படும். கடுமையான தடிப்புகள் உறுப்பு செயலிழப்பு அல்லது வெள்ளை இரத்த அணுக்களின் படியும் ஃப்ளோரசன்ட் அமிலம் போன்றவற்றால் உடல்நலம் பாதிப்படையும்.
டிரெஸ் சிண்ட்ரோம் (Drug rash with eosinophilia and systemic syndrome) அறிகுறிகள்: ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட மருந்து தொடங்கப்பட்ட 2-8 வாரங்களுக்குப் பிறகு உடலில் சில மாற்றங்கள் தோன்றும். காய்ச்சல் மற்றும் தடிப்புகள் டிரெஸ்ஸின் முதல் அறிகுறிகளாகும். மருந்தை நிறுத்துவதன் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டாலும், 3 - 4 வாரங்களுக்குப் பிறகும் ட்ரெஸ் அறிகுறிகள் பின்வருமாறு திரும்பலாம்.
1. கடுமையான சரும வெடிப்பு, சருமத்தில் சிவந்த தடிப்புகள்.
2. 38 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவுசெய்யப்பட்ட உடல் வெப்பநிலையுடன் காய்ச்சல்.
3. உடலில் இரண்டுக்கும் மேற்பட்ட பகுதிகளில் வீக்கங்கள்.
4. குறைந்தபட்சம் ஒரு முக்கிய உள் உறுப்பு பாதிக்கப்படுவது.
5. இரத்தத்தில் வெள்ளை இரத்த அணுக்கள் குறைதல்.
6. உடல் எடை குறைதல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி.
ட்ரெஸ் வருவதன் காரணங்களும், சிகிச்சையும்: வலிப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், அழற்சி மருந்துகள் எடுத்துக்கொள்வதும், மரபியல் காரணிகளும் இந்த நோய்க்குறியின் முக்கிய காரணமாகும். இது கண்டறியப்பட்டால், கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளை உடனே நிறுத்த வேண்டும். இந்த நோய்க்குறியின் இறப்பு விகிதம் 10 சதவிகிதம் என்று மருத்துவ வல்லுநர்கள் கருதுகிறார்கள். எனவே, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுப்பது நலம்.
மருத்துவர் பரிந்துரையின் பேரில் வைட்டமின்கள், சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன, எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்துகின்றன மற்றும் செல்லுலார் சேதத்தை சரிசெய்கிறது.
மாதவிலக்கின்போது தோன்றும் வயிற்று வலியை சமாளிக்க முடியாமல் பெண்கள் மெடிக்கல் ஷாப்பில் தாமாக மாத்திரை வாங்கி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். மாதவிடாய் வலி வரும்போது நிறையப் பெண்கள் மெப்டலின்( Meftal) மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். முடக்குவாதம், கீல்வாதம், காய்ச்சல், பல்வலி ஆகியவற்றின் சிகிச்சையில் மெபெனாமிக் அமில வலி நிவாரணி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்திய மருந்தக ஆணையம் இவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை ட்ரெஸ் சின்ட்ரோம் வருவதற்கு வழி வகுக்கும் என்று சொல்கிறது.