நமது குடல் ஆரோக்கியத்திற்கு ப்ரீபயாடிக்குகள் மற்றும் புரோபயாடிக்குகள் இரண்டும் மிகவும் அவசியம். ப்ரீபயாடிக்குகள் குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதற்கு நேர் மாறாக புரோபயாடிக்குகள் நேரடி நுண்ணுயிரிகள் ஆகும். அவை பெரும்பாலும் நல்ல பாக்டீரியா என்று குறிப்பிடப்படுகின்றன. அவற்றை போதுமான அளவு உட்கொள்ளும்போது பல விதமான ஆரோக்கியம் நன்மைகளை வழங்குகின்றன. இவை குடலில் நேரடியாக நன்மை பயக்கும் பாக்டீரியாவை சேர்க்கின்றன. குடலின் சமநிலையை மேம்படுத்தும் திறன் வாய்ந்தது. ப்ரீபயாடிக்குகள் மற்றும் புரோபயாடிக்குகளின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ப்ரீபயாடிக்குகள் நிறைந்த உணவு வகைகள்: பூண்டு, வெங்காயம், வாழைப்பழங்கள், ஆப்பிள், ப்ளூ பெர்ரி, க்ரேன்பெர்ரி, பேரிக்காய், பிரக்கோலி, ஓட்ஸ், பார்லி, கோதுமைத் தவிடு, முழு தானிய ரொட்டி, பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, கருப்பு பீன்ஸ், கொட்டைகள் மற்றும் பாதாம், ஆளி விதைகள், சியா விதைகள், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இவற்றின் உணவு ஆதாரங்கள் ஆகும். இவை சப்ளிமெண்ட்டுகளிலும் கிடைக்கின்றன.
ப்ரீபயாடிக்குகளின் செயல்பாடுகள் மற்றும் நன்மைகள்: ப்ரீபயாடிக்குகள் நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை ஆதரிக்கின்றன. அடிப்படையில் இந்த நுண்ணுயிரிகளுக்கு உணவாக செயல்படுகின்றன. உடல் தாதுக்கள் உறிஞ்சுவதை மேம்படுத்துகின்றன. குடல் ஒழுங்காக வேலை செய்வதையும் மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரித்து ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை சீர்படுத்துகிறது. இவை குடல் பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு குறுகிய சங்கிலிக் கொழுப்பு அமிலங்களை உருவாக்குகின்றன. அவை பெருங்குடல் செல்களுக்கு ஆற்றலை வழங்குகின்றன. மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை செயல்படுத்துகின்றன. இவை அறை வெப்ப நிலையில் நிலையாக இருக்கும் மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும். இவற்றை உணவின் ஒரு பகுதியாக அல்லது உணவுப் பொருட்களாக உட்கொள்ளலாம்.
புரோபயாடிக்குகள் உணவுகள் யாவை?
புளித்த உணவுகள், புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாக உள்ளன். இந்த உணவுகளில் காணப்படும் பாக்டீரியாக்கள், லாக்டிக் அமில பாக்டீரியா போன்றவை உடலுக்கு நன்மை செய்கின்றன. இட்லி, தோசை, டோக்ளா, தயிர், கஃபீர், கிம்ச்சி, மோர், புளித்த காய்கறிகள், ஊறுகாய், புளித்த பானங்கள், கொம்புச்சா போன்ற புளித்த உணவுகளில் புரோபயாடிக்குகள் காணப்படுகின்றன.
புரோபயாடிக்குகளின் செயல்பாடுகள் மற்றும் நன்மைகள்: இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுடன் போட்டியிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தருகிறது. மேலும் விட்டமின்களை ஒருங்கிணைத்து உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகின்றன. இவை வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப செயல்படும் உணர்திறன் வாய்ந்தவை. எனவே இவற்றின் செயல் திறனை பராமரிக்க கவனமாக இவற்றை சேமிக்க வேண்டும். நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் வைத்தால் இவை மிகவும் புளித்து விடும். இவற்றை உணவு மூலமாகவோ அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலமாகவோ எடுத்துக் கொள்ளலாம். இவற்றை வழக்கமாக உட்கொண்டால் உடலுக்கு நன்மைகளை பெறலாம்.
பயன்பாடுகள்: புரோபயாடிக்குகள் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த உதவுகின்றன. லாக்டோஸ் சகிப்புத்தன்மை மற்றும் எரிச்சல், அலர்ஜி, குடல் நோய்க்குறி போன்றவற்றுக்கு புரோபயாட்டுக்குகள் நன்றாக சிகிச்சை அளிக்க உதவுகின்றன.
ப்ரீபயாடிக்குகள் சிறந்த மலமிளக்கியாக செயல்படுகின்றன. கல்லீரல் செயல்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. பெருங்குடல் புற்றுநோயை தடுப்பதில் இவை சிறந்து விளங்குகின்றன. குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சீரம் அளவை நன்றாக மாற்றும் திறன் படைத்தவை. எனவே ரத்த ஓட்டத்தில் ரத்த குளுக்கோஸ் அதிகரிப்பதை தடுக்கின்றன.
ப்ரீபயாடிக்குகள் மற்றும் புரோபயாடிக்குகள் இரண்டும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவை. அவற்றின் தனித்துவமான செயல்பாடுகள் ஆதாரங்கள் மற்றும் வழிமுறைகள், செரிமானம், சக்தி போன்றவற்றில் மட்டும் சற்றே வேறுபாடுகள் இருக்கின்றன.