உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய உலகில் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. இது பல்வேறு நோய்களுக்கும் உடல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மற்றும் போதுமான உடற்பயிற்சி மூலமாக, உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்தப் பதிவில் உடல் எடையைக் குறைக்க உதவும் பல்வேறு வகையான உடற்பயிற்சிகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
உடற்பயிற்சி செய்வதால் எப்படி உடல் எடை குறைகிறது?
உடற்பயிற்சி செய்வது கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதனால் உடல் எடை குறைகிறது. உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் இதயத்துடிப்பு அதிகரித்து, உங்கள் தசைகள் அதிகமாக வேலை செய்கின்றன. இதனால், உங்கள் உடல் ஓய்வில் இருப்பதைவிட அதிக கலோரிகளை எரிக்கிறது. மேலும், உடற்பயிற்சி செய்வது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் உணவை ஆற்றலாக மாற்றும் செயல்முறை அதிகரிக்கும். வளர்ச்சிதை மாற்றம் அதிகமாக இருக்கும்போது நீங்கள் அதிக அளவிலான கலோரிகளை எரித்து உடல் எடையைக் குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள்:
ஏரோபிக் பயிற்சிகள் - நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடனம் ஆடுதல் போன்ற ஏரோபிக் பயிற்சிகள் இதயத்துடிப்பை அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகின்றன.
வலிமை பயிற்சிகள் - தசைகளை வலுப்படுத்த அதிக எடை தூக்குதல், யோகா போன்ற வலிமை பயிற்சிகள் உதவுகின்றன. தசைகள் வலுவாக இருக்கும்போது அவை ஓய்வில் இருப்பதைவிட அதிக கலோரிகளை எரிக்கும்.
HIIT - HIIT என்பது குறுகிய கால தீவிர உடற்பயிற்சி வகையாகும். இது குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க பெரிதும் உதவும். இத்தகைய உடற்பயிற்சிகளை யூட்யூபில் தேடிப் பார்த்து நீங்கள் வீட்டிலேயே செய்யலாம்.
உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை:
எந்த புதிய உடற்பயிற்சி திட்டத்தை தொடங்குவதற்கு முன்பும், அதை முறையாக கற்றுக்கொண்டு செய்யத் தொடங்குவது அவசியம். உங்களது உடற்பயிற்சி திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவும்.
ஒவ்வொரு பயிற்சியின்போதும் போதுமான அளவு தண்ணீர் குறியுங்கள். உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் உடல் என்ன சொல்கிறது என்பதை கேளுங்கள். அதிக வலி ஏற்பட்டால் ஓய்வெடுக்கவும். சரியான உடற்பயிற்சி உபகரணங்களைப் பயன்படுத்தி, பாதுகாப்பான சூழலில் உடற்பயிற்சி செய்யவும்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்கிற யோசனை நல்லதுதான். மேலே குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க முற்படுங்கள். குறிப்பாக, உடற்பயிற்சி செய்வதற்கான வழிமுறைகளை முறையாக பின்பற்றி, பாதுகாப்பான முறையில் உடற்பயிற்சி செய்வது அவசியம்.