சில நேரங்களில் நமக்கு அடிக்கடி இடது அல்லது வலது கண் துடித்துக் கொண்டே இருக்கும். இதை சிலர், வலது கண் துடித்தால் நல்லது நடக்கப் போகிறது என்றும், இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப்போகிறது என்றும் கூறுவர். ஆனால் உண்மையில் எதனால் கண் துடிக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.
காரணங்கள்:
மருத்துவர்களின் கூற்றுப்படி நம் உடலில் ஏற்படும் சில மாற்றங்களினாலேயே கண் துடிக்கிறது என சொல்லப்படுகிறது. இதற்கான சில காரணங்கள் என்று பார்க்கும்போது, முதலில் மன அழுத்தத்தைதான் சொல்கிறார்கள். அதேபோல அதிக அளவு டீ, காபி குடிப்பவருக்கும் கண் துடிக்குமாம்.
இரவில் சரியாக தூங்கவில்லை என்றாலும் கண் துடிக்கும். மேலும் அதிக உடல் உழைப்பு, மது அருந்துதல், புகைபிடித்தல், அதிக வெளிச்சத்தில் இருத்தல், அதிக மருந்துகள் சாப்பிடுவது போன்றவை கண் துடிப்பதற்கானக் காரணங்களாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே இனி கண் இமை துடித்தால் அதை துரதிஷ்டம் என நினைக்க வேண்டாம். பல சமயங்களில் இந்தப் பிரச்சனை தானாகவே சரியாகிவிடும். இருப்பினும் நீண்ட காலம் கண் துடித்தால் அதை நிறுத்துவதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றினால் முடியும்.
சரி செய்யும் முறைகள்:
முதலில் மன அழுத்தத்தைக் குறைத்து முறையாக தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதுவே பெரும்பாலான பிரச்சனைகளை சரி செய்துவிடும். அதேபோல காஃபீன் அதிகம் நிறைந்த காபி மற்றும் டீ குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். அல்லது குறைந்தது இரண்டு வாரத்திற்கு இவை அனைத்தையும் நிறுத்திப் பாருங்கள், கண் துடிக்கும் பிரச்சினை நிச்சயம் சரியாகும்.
அடுத்ததாக உடலின் நீரின் அளவை முறையாகப் பராமரிக்கவும். சிலருக்கு நீர்ச்சத்து குறைபாட்டினாலும் கண் துடிக்கும் பிரச்சனை இருக்கும். எனவே தினசரி போதிய அளவு தண்ணீர் பருகுங்கள். சில சமயங்களில் கண்ணுக்கு லேசாக மசாஜ் செய்தாலே கண் துடிப்பது நின்றுவிடும். உடலில் மக்னீசியம் சத்து குறைபாட்டினாலும் கண் துடிக்கலாம். எனவே மக்னீசியம் சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், பாதாம், அவகாடோ, பால் போன்றவற்றை சாப்பிடுங்கள்.