நம் உடலில் இரத்த சோகை ஏற்படுவதற்கான முக்கியமான காரணம், உடலில் போதுமான அளவு இரும்புச்சத்து இல்லாததால் ஆரோக்கியமான இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்க முடியாமல் போவதேயாகும். இரத்த சோகை வருவதற்கான முக்கியக் காரணம் சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாததேயாகும். இந்தப் பதிவில் இரத்த சோகையை போக்கும் உணவுகளைப் பற்றி காண்போம்.
நம் உடலில் குறிப்பிட்ட அளவு சிவப்பு இரத்த அணுக்கள் இருக்க வேண்டியது அவசியமாகும். சிவப்பு இரத்த அணுக்களே உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கின்றன. அத்தகைய சிவப்பு இரத்த அணுக்களின் குறைபாடு உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது.
இரத்த சோகை நோய்க்கான அறிகுறிகள் உடல் சோர்வு, மயக்கம், தலைவலி, நெஞ்சுவலி, சருமம் வெளுத்துக் காணப்படுதல் ஆகியனவாகும். இரத்த சோகை நோயைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விட்டால், இதய நோய் பிரச்னை, பெண்களுக்கு கர்ப்ப கால பிரச்னை, குழந்தைகளின் வளர்ச்சியில் பிரச்னை என பலவிதமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆரம்பக்கட்டத்திலேயே இந்த பிரச்னையை சரிசெய்வது மிகவும் அவசியமாகும்.
உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்வதால் இரத்த சோகை பிரச்னையை சரிசெய்ய முடியும். சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிட வேண்டும், தினசரி உணவில் அதிகமாக இரும்புச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தம் விருத்தியாகும். 'வைட்டமின் சி' அதிகமாக உள்ள உணவுகளையும், பழங்களையும் சேர்த்துக்கொள்வது நல்லது.
இரத்த சோகையை போக்க உணவில் மீன், கறி, கோழி, கோதுமை, பீன்ஸ், கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளவேண்டியது அவசியமாகும். இரும்புச்சத்து மாத்திரையை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும். ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, ஆப்ரிக்காட், பேரிச்சை ஆகிய பழங்களில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
பால், காபி, டீ, முட்டை போன்ற உணவுகளை இரத்த சோகையிருக்கும் நபர் சாப்பிடாமல் தவிர்ப்பது சிறந்ததாகும். பிறந்த குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு வராமல் தடுக்க தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியமாகும். தண்ணீர் அதிகமாகக் குடிப்பதும் இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து இரத்த சோகையை போக்கும். இந்த உணவுகளை எல்லாம் தினசரி எடுத்துக்கொள்வதன் மூலம் விரைவாக இரத்த சோகையை போக்க முடியும்.