நமது உடலானது எண்ணற்ற சிக்கல்களைக் கொண்டு ஒரு நெட்வொர்க் மண்டலமாகும். உதாரணத்திற்கு சென்னையில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு டிராபிக் சிக்னல் போன்றது. வண்டிகள் எந்த தடையும் இன்றி நாற்புறமும் சீராக போவதுபோல உடலில் ரத்தமானது எல்லா இடங்களுக்கும் சீராக செல்ல வேண்டும். இதன் மூலமாகவே நம் உடலில் ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுகிறது. எனவே ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை பராமரிக்க, நாம் ஆரோக்கியமான சில உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பீட்ரூட்: பீட்ரூட்டில் அதிகப்படியான நைட்ரேட் நிரம்பியுள்ளது. இது ரத்த நாளங்களை தளர்த்தி நல்ல ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும். இதனால் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியமும் மேம்படும்.
சிட்ரஸ் பழங்கள்: விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களில் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக மாற்றும் பண்புகள் உள்ளது. உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு விட்டமின் சி மிகவும் முக்கியமானதாகும். இதனால் ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்கள் உருவாகிறது.
காய்கறி மற்றும் கீரைகள்: காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் உடலுக்குத் தேவையான நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இது நம் உடலில் எல்லா பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் செல்ல உதவுகிறது. பொதுவாகவே காய்கறிகள் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் எல்லா பாதிப்புகளும் நீங்கும். அதே நேரம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் காய்கறிகளில் கிடைக்கும் என்பதால், ஒரு ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நட்ஸ்: ஆலி விதைகள், பாதாம் பருப்பு, சியா விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது போக அதில் நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடல் வீக்கத்தை குறைக்கிறது. இதன் மூலமாக உடலுக்கு சீரான ரத்த ஓட்டம் பாய வழிவகுக்கிறது.
பூண்டு: பொதுவாகவே பூண்டு இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என நாம் அறிந்த ஒன்றாகும். பூண்டு தினசரி சாப்பிடுவதாலும் ரத்த நாளங்கள் தளர்த்தப்பட்டு ரத்த அழுத்தம் குறைகிறது. இதன் மூலமாக ரத்த ஓட்டம் சீராகும்.
எனவே நம் ஆரோக்கியத்திற்கு ரத்த ஓட்டத்தை பராமரிப்பது முக்கியமானதாகும். மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக, ரத்த ஓட்டம் சீராக அமைவதுடன் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, சராசரியாக உடற்பயிற்சி செய்து வந்தாலே நம்மிடம் எந்த நோய்களும் அண்டாது.