பழங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருவதில் வல்லவை. ஆனால், இருமல் மற்றும் ஜலதோஷத்தின்போது சில வகையான பழங்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், சில உணவுகளையும் விலக்க வேண்டும். அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தவிர்க்க வேண்டிய பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இவற்றில் அமிலத்தன்மையும் அதிகமாக இருக்கும். இவை தொண்டைப் புண் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும், இருமலை அதிகரிக்கும். வைட்டமின் சி யில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தபோதிலும் சளி மற்றும் இருமலின்போது இந்தப் பழங்களைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வாழைப்பழங்கள் அல்லது லேசாக சமைத்த ஆப்பிள்கள் போன்றவற்றை உண்ணலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
இனிப்புகள் மற்றும் சர்க்கரை உணவுகள்: இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை பலவீனப்படுத்தும். சர்க்கரை நிறைந்த உணவு வகைகள் வீக்கத்தை ஊக்குவிக்கும். சளியின் உற்பத்தியை அதிகரிக்கும். சுவாச அறிகுறிகளை மோசமாக்கும். மேலும், சர்க்கரை உணவுகள் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்காமல் வெற்றுக் கலோரிகளை மட்டும் அதிகப்படுத்துகின்றன. எனவே, இவற்றை இருமல், சளியின்போது தவிர்க்க வேண்டும்.
காரமான உணவுகள்: இவை நாசிப் பாதைகளை எரிச்சலூட்டி தொண்டை புண்ணை அதிகமாக்கி இருமலையும் மோசமாக்கும். மிளகாய் போன்ற காரமான உணவுகள் வீக்கம் மற்றும் அசெளகரியத்தை அதிகரிக்க வழிவகுக்கும். பலரும் சளி பிடித்திருக்கும்போது நல்ல காரமான உணவை உண்ண விரும்புவார்கள். அவற்றுக்கு பதிலாக லேசான காரத்துடன்கூடிய உணவு வகைகளை உண்பது நல்லது.
வறுத்த உணவுகள்: வறுத்த சிக்கன், பர்கர், வடை, போண்டா, பஜ்ஜி போன்ற பொருள்கள் ஜீரணிக்கக் கடினமாக இருக்கும். உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது இதுபோன்ற உணவுகளை உண்டால் உடலை பலவீனப்படுத்தும். அதற்கு பதிலாக வேகவைத்த காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது. இவை ஜீரணிக்க எளிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை மீட்க உதவுகிறது.
பால் பொருட்கள்: பால், பாலாடைக் கட்டி, ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்கள் சளியை அதிகப்படுத்தி சுவாசத்தை கடினமாக்கும். எனவே, இவற்றை தவிர்த்து விட்டு பாதாம் அல்லது ஓட்ஸ் பால் போன்ற பால் அல்லாத பானங்களை எடுத்துக் கொள்ளலாம்.
மது மற்றும் காஃபினேட்டட் பானங்கள்: காபி மற்றும் எனர்ஜி பானங்கள், மது போன்றவை நீர் இழப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்புத் திறனை பாதிக்கும். தூக்க நிலைகளை சீர்குலைக்கும். இவற்றிற்கு பதிலாக போதுமான வெதுவெதுப்பான நீர், மூலிகை தேநீர், சூப்புகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்: பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், தின்பண்டங்கள், பக்கோடா, சிக்கன் 65, வறுத்த மீன் போன்றவற்றை உண்பதற்கு சுவையாக இருக்கும். ஆனால், தொண்டையில் வலியை அதிகப்படுத்தும். சளி இருமலின்போது இவற்றைத் தவிர்த்து விட்டு ஆப்பிள் சாஸ் மற்றும் ஸ்மூத்தீஸ் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.