அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மூளைச்சாவடைந்த மனிதருக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டு உள்ளது.
சிறுநீரக செயலிழப்பு நோய் உலகின் மிக முக்கிய பிரச்சனைகள் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்து வருகின்றனர். மேலும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களும் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை உள்ளது.
அதே நேரம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்து உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் நன்கொடையாளர்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பலர் சிறுநீரக நன்கொடையாளர்கள் கிடைக்காமல் உயிரிழந்தும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான மாற்று முறைகளை கண்டறிந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பன்றியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகத்தை ஜீன் மாற்று சிகிச்சை மூலம் மனித ஜீனுக்கு இணையானதாக மாற்றி அதை மூளை சாவு அடைந்த மனிதரின் உடலில் பொறுத்து உள்ளது.
ஜூலை மாதம் 14ஆம் தேதி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பன்றியின் சிறுநீரகம் மூளைச்சாவடைந்த மனிதருக்கு பொருத்தப்பட்டது. மேலும் அந்த மனிதரின் முழு உடல் நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 32 நாட்களுக்கு மேலாக அந்த மனிதருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல், அந்த சிறுநீரகம் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் பல்கலைக்கழகத்தின் லான்கேன் உறுப்பு மாற்று மையத்தில் நடைபெற்ற இந்த சிகிச்சை வெற்றியடைந்திருப்பதாக மருத்துவ குழு அறிவித்துள்ளது. மேலும் இதற்கு முன்பு நான்கு முறை மூளைச்சாவடைந்த மனிதரின் உடலில் பன்றியின் சிறுநீரகம் வைத்து பரிசோதிக்கப்பட்டது. அவை தோல்வியில் முடிவடைய தற்போது வெற்றி கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுநீரக மாற்று சிகிச்சை முழுமையான பயனளிக்கும் பட்சத்தில் உலகம் முழுவதும் சிறுநீரகம் செயலிழந்து வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது பயன் அளிக்கும்.