அஞ்ஜீர் (Anjeer) எனப்படும் அத்திப் பழத்தில் நம் உடலுக்குத் தேவையான பல வகை ஊட்டச் சத்துக்கள் நிறைந்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இது நம் உடலின் சக்தியை அதிகரிக்கவும், தசைகளை வலுப்பெறச் செய்யவும், இரைப்பை குடல் இயக்கங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சிறந்த முறையில் உதவி புரியும்.
நம் நாட்டில் உலர் அத்திப்பழங்களை அநேகம் பேர் உட்கொண்டு பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் அத்திப்பழம் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிட்டேரியன் ஃபுரூட்டா? என்றொரு சந்தேகம் எழுந்து பேசு பொருளாகியுள்ளது. இதற்கான விளக்கம் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக, ஒரு தாவரம் பூ பூத்து பிஞ்சு உண்டாவதற்கு பூவிற்குள் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது அவசியம். அத்திப்பூ மற்ற பூக்களைப் போல் இல்லாமல், அளவில் சிறியதாகவும் கீழ்நோக்கி கவிழ்ந்த நிலையிலும் இருக்கும். இதனால் வழக்கம் போல தேனீக்கள் உட்சென்று மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவது மற்றும் காற்றின் வாயிலாக மகரந்த துகள்கள் பரவுவதும் முடியாமல் போய் விடுகிறது. மிகச் சிறிய வகை பெண் தேனீ, அத்திப் பூவில் உள்ள சிறிய துவாரத்தைக் கண்டறிந்து முட்டி மோதி அதன் உள் செல்கிறது.
அந்தச் செயலில் அதன் இறகுகளும் ஆன்டெனாவும் உடைந்து விடுகின்றன. எதையும் பொருட்படுத்தாமல், பூவுக்குள் மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவிவிட்டு முட்டைகளையும் இட்டு வைக்கிறது. பின் வெளியேற முடியாமல் அங்கேயே இறந்தும் போகிறது. இப்போது பூவிலிருந்து பிஞ்சு தோன்றுகிறது. அதிலிருந்து வரும் ஒரு வகை இயற்கையான என்சைமானது தேனீயின் உடலை உடைத்து உண்ண ஆரம்பிக்கிறது. பிஞ்சு காயாகிறது.
இப்போது தேனீயின் உடைக்கப்பட்ட உடற்கூறுகளை அங்கு உற்பத்தியாகும் ஃபிசின் (Ficin) என்ற ஸ்பெஷல் என்சைம் புரோட்டினாக மாற்றவும் ஜீரணிக்கவும் உதவுகிறது. அத்திக்காய் பழமாகிறது.
தேனீ இட்ட முட்டைகளிலிருந்து லார்வாக்கள் உற்பத்தியாகி, வளர்ந்து, இனவிருத்தி செய்து வெளியேறுகின்றன. அம்மா தேனியின் உடல் முழுவதுமாக உறிஞ்சப்பட்டு விடுகிறது. இப்போது நாம்தான் தீர்மானிக்க வேண்டும், அத்திப்பழம் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிட்டேரியன் ஃபுரூட்டா என்பதை!
அத்திப்பழம் ஒரு வெஜிடேரியன் பழம்தான் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில், அதனுள் நடைபெறும் செயல்கள் எல்லாம் இயற்கையின் சுழற்சியில் ஓர் அங்கம்தான் என்கின்றனர்.