ஆரோக்கியம்

தைராய்டுக்கும் மாதவிடாய்க்கும் தொடர்பு உண்டா?

சேலம் சுபா

ரு பெண்ணின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். சமீப காலமாக பெண்களை குழப்பத்தில் ஆழ்த்தி, அதிக கவனிப்பைப் பெறும் உடல்நலப் பாதிப்புகளில் ஒன்று தைராய்டு. இது உடலின் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தி நலத்தை மேம்படுத்தும் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு பிரச்னையாகும்.

தைராய்டு என்றால் என்ன?

கழுத்தின் கீழ் பகுதியில் அமைந்திருக்கும் மிக முக்கியமான நாளமில்லா சுரப்பி. இதன் பயன்பாடு நம் உடலில் உள்ள அனைத்து திசுக்களின் செயல்களையும் கட்டுப்பாட்டில் வைப்பதுதான். இந்த சுரப்பி தைராக்ஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இரத்தத்தில் இதன் அளவு ஏற்படுத்தும் ஏற்ற, இறக்கம்தான் உடல் நலனில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இதன் பாதிப்புகள் அல்லது அறிகுறிகள் என்ன?

பொதுவாகவே, தைராய்டு பாதிப்பின் அறிகுறிகளாக பெண்களுக்கு முடி உதிர்தல், மலச்சிக்கல், குரல் மாற்றம், கழுத்தில் திடீர் வீக்கம், சரும மாற்றங்கள், குழந்தையின்மை, உடல் பருமன் அல்லது மெலிதல், ஒழுங்கற்ற மாதவிடாய், திடீர் பதற்றம், படபடப்பு, உடல் சோர்வு ஆகியவற்றைக் கூறலாம். ஆனாலும், இவை அனைத்தும் ஒருவரையே பாதிப்பதில்லை. தைராய்டில் இரண்டு வகையுண்டு. அவரவர் உடலில் சுரக்கும் தைராக்ஸின் அளவுக்கேற்ப இதன் பாதிப்பு தன்மைகளும் மாறுபடும்.

இதற்கான மருத்துவப் பரிந்துரைகள் எவை?

இக்காலத்தில் எந்த வயதினரையும் உடல்நல பாதிப்பு விட்டு வைப்பதில்லை என்பதால், மேற்சொன்ன அறிகுறிகள் யாரிடம், எந்த வயதில் தென்பட்டாலும் முதலில் இரத்தத்தில் தைராய்டு அளவின் பரிசோதனையை மேற்கொண்டு தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியமான ஒன்று. அதிலும், ஆண்களை விட பெண்களுக்கு பத்து மடங்கு அதிக பாதிப்பு என்பதால் பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மாத்திரைகளைத் தவிர்ப்பது நல்லதா?

நிச்சயம் இல்லை. ஆனால், தொடர்ந்து ஒரே மாத்திரையை வருடக்கணக்கில் எடுப்பதைத் தவிர்த்து, ஆறு மாதம் அல்லது வருடத்துக்கு ஒரு முறை தைராய்டு டெஸ்டை செய்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொண்டு தங்கள் நலனைக் காத்துக்கொள்வது நல்லது.

தைராய்டுக்கும் மாதவிடாய்க்கும் தொடர்பு உண்டா?

கண்டிப்பாக உண்டு. மாதவிடாய் முடியும் காலமான மெனோபாஸ் வயதில் உள்ள பெண்மணிகள் கட்டாயம் தைராய்டு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஹார்மோன்கள் மாற்றத்தால் ஏற்படும் பல உடல் மற்றும் மனம் சார்ந்த விளைவுகளை இதனால் தடுக்கலாம்.

கர்ப்பிணிகள் இந்தப் பரிசோதனை செய்வது எவ்வளவு அவசியம்?

கண்டிப்பாக கர்ப்பிணிப் பெண்களும் இந்தப் பரிசோதனையை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். கருவில் உருவாகும் குழந்தையின் மூளைத்திறனுக்கு நாளமில்லா சுரப்பியின் செயல் அவசியம் தேவை என்பதால் கர்ப்பிணிகளுக்கும் இந்தப் பரிசோதனை அவசியமாகிறது.

தைராய்டு என்பது ஒரு நோயல்ல என்பதைப் புரிந்து கொண்டு அதற்கான விழிப்புணர்வுடன் முறையான மருத்துவப் பரிசோதனைகள் மூலம் பெண்கள் தங்கள் உடல் நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம்.

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

டைப் A மற்றும் டைப் B இரண்டும் கலந்த ஆளுமைத்தன்மை உள்ளவர்களின் சிறப்பியல்புகள்!

பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

SCROLL FOR NEXT