கொளுத்தும் கோடை வெப்பத்தால் வியர்வை வழியாக இழக்கப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சரி செய்ய நீரேற்றத்துடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. இதற்கு வெறும் தண்ணீர் குடிப்பதே சிறந்ததாக இருந்தாலும், தண்ணீர் நமது தாகத்தை மட்டுமே தணிக்கும். எனவே கோடைகாலத்தில் உடலை குளுமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அனைவரும் தேர்வு செய்யும் இரண்டு விஷயங்கள் எதுவென்றால், எலுமிச்சை சாறு மற்றும் இளநீர். ஆனால் இந்த இரண்டு பானங்களில் எது உடலுக்கு நல்லது என்பது உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை சாறு: எலுமிச்சை பழத்திலிருந்து எடுக்கப்படும் எலுமிச்சை சாறு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பிரபலமான கோடைகால பானமாகும். எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்று பார்க்கும்போது:
எலுமிச்சை சாற்றில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றியாகும். இதனால் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் பலம் பெறுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதில் இயற்கையான அமிலத்தன்மை இருப்பதால், உடலின் pH அளவை சமநிலைப்படுத்தி, வீக்கத்தை எதிர்த்து போராடவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
எலுமிச்சை சாறு இயற்கையான செரிமான செயல்பாட்டுக்கு உதவுகிறது. பித்தம் மற்றும் வயிற்று அமிலங்களின் உற்பத்தியை அதிகரித்து சீரான செரிமானத்தை எளிதாக்குகிறது. இதனால் அஜீரணம், வீக்கம், நெஞ்செரிச்சல் போன்றவை தடுக்கப்படுகிறது.
எலுமிச்சை சாறு கல்லீரல் செயல்பாட்டை அதிகரித்து உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் அவ்வப்போது எலுமிச்சை சாறு குடிப்பதால் வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் எடை பராமரிப்புக்கும் பெரிதளவில் உதவுகிறது.
இளநீர்: இளநீர் பொதுவாகவே இயற்கையின் ஆற்றல் பானம் எனக் குறிப்பிடப்படுகிறது. இளநீர் உடலுக்கு நீரேற்றம் கொடுப்பது மட்டுமின்றி, உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்டுகளைக் கொடுத்து ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க உதவுகிறது. கோடைகாலத்தில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்று பார்க்கும்போது:
இளநீரில் பொட்டாசியம், சோடியம் மற்றும் மக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இது உடலின் திரவத் தேவையை பூர்த்திசெய்து, இயற்கையான ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.
இதில் நிறைந்து காணப்படும் விட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ், கால்சியம் மற்றும் இரும்பு உள்ளிட்டவை, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆதரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதன் ஐசோடோனிக் தன்மை காரணமாக இளநீர் உடலில் எளிதாக உறிஞ்சப்படுகிறது. எனவே உடல் உழைப்பு, நீரிழப்பு போன்றவற்றிற்குப் பிறகு இழந்த திரவங்களை நிரப்ப இளநீர் உதவியாக இருக்கும்.
இளநீரில் இருக்கும் பயோ ஆக்டிவ் என்சைம்கள் செரிமானத்தை மேம்படுத்தி, அமில ரிப்லெக்ஸை குறைக்க உதவும். எனவே அஜீரணம் அல்லது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது.
எலுமிச்சை சாறு Vs. இளநீர்: எது சிறந்தது?
எலுமிச்சை சாறு மற்றும் இளநீர் இரண்டுமே அவற்றின் தனித்தனி ஆரோக்கிய நன்மைகளுக்காகப் பிரபலமானவை. இரண்டில் எதைத் தேர்வு செய்து பருக வேண்டும் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் விருப்பங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சுகாதார தேவைகளைப் பொருத்தது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நச்சுத்தன்மையை நீக்கி புத்துணர்ச்சியூட்டும் பானத்தை நீங்கள் குடிக்க விரும்பினால் எலுமிச்சை சாறு சிறந்தது. இதுவே, உடலின் நீரேற்றத்திற்கு உதவி, எலக்ட்ரோலைட்டுகளை உடலில் நிரப்பி இயற்கையான ஆற்றலைப் பெற விரும்பினால் இளநீரைத் தேர்வு செய்யுங்கள்.