Mango flower water to regulate digestive function https://tamil.hindustantimes.com
ஆரோக்கியம்

ஜீரண மண்டல செயல்பாட்டை சீராக்கும் மாம்பூ நீர்!

ஆர்.பிரசன்னா

பூக்களும் பிஞ்சுகளுமாய் மாமரங்கள் பூத்துக்குலுங்கும் சீசன் இது. மாம்பூக்களின் வாசனை மிகவும் சுகமாய் இருக்கும். அதைப் போலவே, மாம்பூக்கள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. மாம்பூக்களில் அமினோ ஆசிட், ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால் பல்வேறு நோய்களுக்கு இது மருந்தாகவும், அதேவேளையில் பல நோய்கள் உருவாகாமலும் தடுக்க உதவுகிறது.

பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய் புண்களைக் குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. இதிலுள்ள காலேட் என்ற சத்து, ஈறு வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், மாம்பூவை கொதிக்கும் நீரில் கலந்து வடிகட்டிய பின், அந்த நீரைப் பருகினால் பல் வலி குணமாகும்.

உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத் தொல்லை ஒழியும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல் நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சம அளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட வயிற்றுப் பொருமல், குமட்டல் ஆகியவை நீங்கும்.

உலர்ந்த மாம்பூக்களை நன்றாகப் பொடி செய்து மோரில் கலந்து, தினமும் மூன்று வேளை பருகி வர, வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமடையும். மாம்பூவில் உள்ள மான்கிஃபெரின் என்ற சத்து இன்சுலின் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும். எனவே, உடலின் சர்க்கரை அளவைக்  கட்டுப்படுத்துவதில் மாம்பூ பெரிதும் உதவுகிறது. மேலும், கொழுப்பை குறைக்கவும் இது உதவுகிறது.

உலர்ந்த மாம்பூ, சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக்கி, சலித்து எடுத்து இந்தத் தூளை  2 ஸ்பூன்  சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை என தினமும் சாப்பிட்டு வர, மூல நோய் கட்டுப்படும்.

மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் தலா 5 கிராம் சேகரித்து, நீர் விட்டு மை போல் அரைத்து, அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை 2 நாட்கள் சாப்பிட வர, சீதபேதி குணமாகும். மாம்பூக்களை இரவு  முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை பருகி வர, ஜீரண மண்டலத்தின் செயல்பாடு சீரடையும்.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

SCROLL FOR NEXT