Medicinal benefits of Thumbai plant https://rajapalayamtimes.com
ஆரோக்கியம்

தும்பை இருக்க தூரப் போகும் நோய்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

பொதுவாக, சாலை ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் காணப்படுபவை தும்பைச் செடிகள். சித்த மருத்துவத்தில் இந்தச் செடியின் பூ, இலை, வேர் ஆகியவை மருந்தாகப் பயன்படுகிறது. ஆயுர்வேதத்தில், ‘துரோண புஸ்பி’ என அழைக்கப்படும் இதனை விஷ முறிவுக்குப் பயன்படுத்துகின்றனர். ஆன்மிகத்தில் சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான மலர் இது.

தும்பைச் செடியில் பெருந்தும்பை, சிறு தும்பை, கருந்தும்பை, மலை தும்பை, காசி தும்பை என பல வகைகள் உண்டு. தும்பைப் பூ உடல் உஷ்ணம் உண்டாக்குவதாகவும், சளியை அகற்றுவதாகவும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. ஒற்றைத் தலைவலி, தலைபாரம், மண்டையில் நீர் கோர்த்து கொள்ளுதல், இருமல் போன்ற பிரச்னைகளையும் தீர்க்க வல்லது.

ஒரு கைப்பிடி அளவு தும்பைப் பூவை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி சிறிது தேன் கலந்து பருக நா வறட்சி போகும்.

ஒற்றைத் தலைவலிக்கு தும்பைச் செடியை பூக்களுடன் உடைத்து வந்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்க ஒற்றை தலைவலி காணாமல் போகும்.

குழந்தைகளுக்கு காய்ச்சிய பாலில் 20 தும்பை பூக்களை போட்டு அரை மணி நேரம் ஊற விட்டு வடிகட்டி கொடுக்க தொண்டையில் உள்ள சளி வெளியேறிவிடும்.

இரண்டு கைப்பிடி அளவு தும்பை பூவை 200 மில்லி நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்துக்கொண்டு தலைக்கு தேய்த்து குளித்து வர, தலைவலி, தலைபாரம், சைனஸ், மூக்கடைப்பு ஆகியவை சரியாகும்.

தும்பை இலை, பூ இரண்டையும் சேர்த்து அரைத்து சிறிது வடிகட்டி அந்தச் சாறை உள்ளுக்கு குடித்துவிட்டு, அரைத்ததை பூச்சி கடித்த இடத்தில் பற்று போட, விஷம் முறிந்து விடும்.

தும்பைப் பூக்களை உலர வைத்து தேனில் குழைத்து சாப்பிட இரைப்பு நோயின் தீவிரம் குறையும்.

தும்பைப் பூவை பறித்து, அலம்பி அத்துடன் அரை ஸ்பூன் மிளகு பொடி, தேன் சிறிது கலந்து வாயில் போட்டு மென்று தின்ன இருமல், சளி, அடுக்குத் தும்மல் ஆகியவை குணமாகும். அத்துடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

சொறி, சிரங்கு, உடல் அரிப்புக்கு தும்பை பூ மற்றும் தும்பைச் செடியின் இலைகளை பறித்து வந்து அரைத்து மேற்பூச்சாக பூசி விட குணமாகும்.

மேற்கண்ட ஆலோசனைகளை சித்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின்படி செய்வது மிகவும் நல்லது.

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

SCROLL FOR NEXT