இயற்கையின் கொடையாக எண்ணற்ற காய்கறிகள், பழங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றில் உள்ள சத்துக்கள் நம் உடல் நலத்தைக் காக்கும் அற்புதப் பணியைச் செய்து வருகின்றன. ஆப்பிள், சப்போட்டா, ஆரஞ்சு, திராட்சை, கொய்யா, மாம்பழம் என்று நம்மிடையே அதிகம் புழக்கத்தில் உள்ள பழங்கள் பற்றி ஏற்கெனவே நிறைய அறிந்து இருக்கிறோம். ஆனால், இன்னும் நம்மில் பலர் அறியாத பழங்களில் ஒன்றுதான் சைவ முட்டைப்பழம். கோழி முட்டையில் இருக்கும் கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், பாஸ்பரஸ் போன்ற அனைத்து விதமான சத்துகளும் இந்தப் பழத்தில் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
பார்ப்பதற்கு கோழி முட்டை போல மஞ்சள் நிறத்தோலுடனும், உள்ளே இருக்கும் சதைப் பகுதி மஞ்சள் நிறக் கருவைப் போல இருப்பதால் இது முட்டைப் பழம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பழத்தில் உள்ள இரும்புச் சத்து மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மன அழுத்தம் குறைத்து ஆழந்த உறக்கத்துக்கு இந்தப் பழம் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து சருமப் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.
மனித உடலில் இரும்புச்சத்து, ஹீமோகுளோபின், ஆக்சிஜன் போன்றவற்றின் தடையற்ற பரிமாற்றம் நடைபெற இந்தப் பழம் உதவுகிறது. நீரிழிவு போன்ற பல்வேறு பாதிப்புகளையும் கட்டுப்படுத்தவல்லது இந்தப் பழம். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானப் பிரச்னைக்கு நிவாரணம் தருகிறது. மேலும், இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவற்றுக்கும் சிறந்த நிவாரணமாகிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது.
பூட்டேரியா கேம்ப்ஸியானா என்பது இதன் அறிவியல் பெயராகும். ஆங்கிலத்தில் எக்ப்ரூட்ஸ் என்றும் கேனிஸ்டல் ப்ரூட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. சப்போடேசி குடும்பத்தைச் சேர்ந்த சைவ முட்டை பழத்தின் பூர்வீகம் மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவாகும். ஆசியாவில் இலங்கை, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா மற்றும் தைவான் போன்ற சில வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
தற்போது சேலம், ஏற்காட்டில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு மணல் கலந்த களிமண் நிலங்களில் இந்த முட்டைப்பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏற்காட்டில் உள்ள ஒண்டிக்கடை உள்பட, பல்வேறு இடங்களில் விற்பனைக்காக இந்தப் பழம் குவித்து வைக்கப்பட்டு சுற்றுலாவாசிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.
மழைக்காலமான இந்த சீசனில் சளிக்கு மருந்தாக உதவும் இந்தப் பழத்தை வாங்கிச் செல்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இயற்கை வழியில் உடல் நலனைப் பேணுவதில் விழிப்புணர்வு பெருகியுள்ள தற்காலத்தில் இந்த சைவ முட்டைப் பழம் மக்களைக் கவர்ந்துள்ளது ஆச்சரியமல்ல.