நாம் எல்லோரும் பிறந்ததிலிருந்தே இசையை தாலாட்டு வடிவில் கேட்டுதான் வளர்ந்திருக்கிறோம். வளர்ந்த பின்னும் பல தருணங்களில் இசை என்பது நம் கூடவே வரும் உற்ற துணை என்றால் அதை மறுப்பதற்கில்லை. இயற்கையின் படைப்பாக இசையைக் கொண்டாடும் உலகம் இது.
மகிழ்ச்சிக்கும், தூக்கத்திற்கும், கொண்டாடத்திற்கும், ஏன் தனிமை, நோய்வாய்ப்பட்டு இருக்கும்போதும் என அனைத்து நிகழ்வுகளையும் நிறைவாக்குவது இசையே. இந்த இசையை நோய்க்கான சிகிச்சை தெரபியாகவும் நோயாளிகளுக்குத் தரப்படுகிறது. மனதை சாந்தப்படுத்தி, மகிழ்ச்சியாக்கும் இசை தெரபியானது நரம்பியல் மற்றும் மனவியல் சம்பந்தமான பல சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இசையை கேட்பது, இசையை மருந்தாகப் பயன்படுத்தி பல உடல்நலக் குறைவை சரிசெய்கிறார்கள். காயங்களினாலோ,அறுவை சிகிச்சைகளினாலோ, உடல் உள்ளுறுப்புகளின் சீர் கேட்டாலோ ஏற்படும் வலியை இசை தற்காலிகமாக மறக்கச் செய்கிறது. மன அழுத்தம், மனப் பதற்றம் இரண்டுமே இசையால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அமைதியான மன நிலையை இசை உருவாக்குகிறது. இசை கேட்கும் பழக்கம் நாளடைவில் கவனச் சிதறல்களை கட்டுப்படுத்தி கவனக் குவிப்பையும், கிரகிக்கும் தன்மையையும் அதிகரிக்கிறது.
இசை மனதை ரிலாக்ஸ் செய்து இதயத் துடிப்பை சீராக்குகிறது. இரத்த ஓட்டம் இயல்பாவதால் மனம் சாந்தமாகி, சோர்வு நீங்கி புத்துணர்ச்சியைத் தருகிறது. நமது உணர்வுபூர்வமான மனநிலையைக் கட்டுப்படுத்துவதிலும், நியூரான்களை இசை தொடுவதால் சீரற்ற உணர்வு நிலைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
நினைவு மறதி நோயாளிகள் தம்மை சுற்றியுள்ள நிகழ்வுகள், மனிதர்களை மறந்து போய்விடுவர். மெமரி லாஸ் எனப்படும் நினைவு மறதி கொண்ட நோயாளிகளின் மூளைத் திறனை இசை மேன்மைப்படுத்துகிறது. நினைவில் வைக்கும் திறனை அதிகரித்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை இசை மேன்மைப்படுத்துவதோடு, குணமாக்கவும் செய்கிறது.
மூளையின் இயக்கத்தை சீரமைக்கிறது. அறுவை செய்து முடிந்த பின்னர் தொடர் சிகிச்சையில் படுக்கையில் இருக்கும்போது இசை மனிதனுக்கு பேருதவியாக மனநலனை பாதுகாக்க உதவுகிறது. வலி மற்றும் கவலைகளைப் போக்கி உணர்வை சாந்தப்படுத்துகிறது. இசை, நோயாளிகளின் விரைவான உடல்நல மேன்மைக்கு உதவுகிறது. மன நலனை மேம்படுத்துவதால் அனைத்து தரப்பினருக்கும் இசை தெரபி செலவில்லாத மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுகிறது. ஸ்ட்ரெஸ், பதற்றம் மட்டுமல்லாமல், எல்லா வகை மனநலக் கோளாறுகளையும் இசை ஆற்றுப்படுத்துகிறது. இசை தெரப்பி மனதிற்கும்,உணர்விற்கும் நன்மை தருகிறது என்றால் அது மிகையில்லை.