நமது தோற்றக் கவர்ச்சி மற்றவரை முதல் பார்வையிலேயே ஈர்க்க வேண்டுமானால் நமது வெளிப்புற சருமம் பளபளவென்று, மாசு மருவற்ற பொலிவுடன் காணப்படுவது அவசியம் ஆகும். சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் திகழ, உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கு நாம் எந்த மாதிரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
செல்களில் ஏற்படும் அழிவைத் தடுத்து, செல்களைக் காக்கும் குணம் கொண்டது லைக்கோபீன் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட். இது சமைத்த தக்காளிப் பழங்கள், பப்பாளி, வாட்டர் மெலன் போன்றவற்றில் மிக அதிகம் உள்ளது. இவற்றை உண்பதால் சருமத்தில் சன் பர்ன் (sun burn) உண்டாவதும், சீக்கிரமே உடல் வயதான தோற்றம் பெறுவதும் தடுக்கப்படுகின்றன.
சோயா மில்க், டோஃபு மற்றும் பருப்பு வகைகளில் உள்ள ஈசோஃபிளவோன்ஸ் (Isoflavones) என்ற பொருட்கள் வலுவான சருமம் பெறவும், சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையைப் பராமரிக்கவும், சருமத்தில் ஏற்படும் ஃபைன் லைன்ஸ் (Fine lines) எனப்படும் மெல்லிய சுருக்கங்கள் வராமல் தடுக்கவும் உதவுகின்றன.
நெல்லிக்காய், கொய்யா, குடை மிளகாய் ஆகியவற்றில் சரும ஆரோக்கியம் காக்கத் தேவையான கொலாஜன் என்ற புரதத்தை உற்பத்தி செய்ய உதவி புரியும் வைட்டமின் C அதிகளவில் உள்ளது. இவற்றை உண்பதால் சருமம் வலுப் பெறுவதோடு, சருமத்தில் பளபளப்பும் மிருதுத் தன்மையும் கூடும்; கரும்புள்ளிகள் மறையும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த வால்நட், சியா மற்றும் ஃபிளாக்ஸ் விதைகளை உண்பதால் சருமத்தில் ஏற்படும் மருக்கள் நீங்கவும், சருமம் சிவத்தல் மறையவும் செய்யும். மேலும், சுத்தமான மிருதுத்தன்மை நிறைந்த சருமம் உருவாகும்.
சூரியகாந்தி விதை, பாதாம் பருப்பு, பசலைக் கீரை ஆகியவற்றில் உள்ள வைட்டமின் E சூரியக் கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்தைக் காக்கின்றன. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சருமத்துக்கடியில் ஈரப் பசையைத் தக்க வைக்கவும், அல்ட்ரா வயலட் கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் செல் அழிவைத் தடுக்கவும் செய்கின்றன.
கோடைக்காலத்தில் வெப்பத்திலிருந்து சருமத்தைக் காத்துக்கொள்ள மேற்கூறிய உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டு சரும ஆரோக்கியத்தை கண்ணும் கருத்துமாய் காப்போம்.