பிரண்டை 
ஆரோக்கியம்

இரத்தக் குழாய் கொழுப்பை கரையச் செய்யும் பிரண்டை மூலிகை!

பொ.பாலாஜிகணேஷ்

பிரண்டைக் கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு. இது சாதாரணமாக நம் வீட்டு தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் தண்ணீரே இல்லாமல் கூட வளரக்கூடிய ஒன்று. ஆனால், பிரண்டையில் இருக்கும் மருத்துவ குணங்கள் மிகவும் ஏராளம். பிரண்டையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

பிரண்டை நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது. ஆண்மையைப் பெருக்குகிறது. பசியைத் தூண்டி விடுவதில் இதற்குத்தான் முதலிடம். நெய் விட்டு பிரண்டைத் தண்டை வதக்கி துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல், சிறுகுடல், பெருங்குடல் புண் நீக்கி நல்ல பசி உண்டாகும்.

பிரண்டையை வதக்கி அத்துடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்துச் சுண்டைக்காய் அளவு, தினந்தோறும் இரண்டு வேளை சாப்பிட, சுவாச காசம் (ஆஸ்துமா) சாந்தப்படும். இளம் பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை, மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும். இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குணமாகும்.

பிரண்டைத் துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும். செரிமானக் கோளாறைப் போக்கும். மலச்சிக்கலை நீக்கும். குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும்.

பிரண்டை தண்டுகளைச் சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் குடித்தால் எலும்புகள் பலம் பெறும். முறிந்த எலும்பு விரைவில் கூடும். ஒரு மாதம் பிரண்டை ரசம் குடிக்க வேண்டும். உடலில் கொழுப்புச் சத்துகள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைப்படுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும். எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?

உலகிலேயே விலையுயர்ந்த பாஸ்போர்ட் இதுதான்! இதன் விலை எவ்வளவு தெரியுமா?

காலிஃப்ளவர் சமைக்கும் முன் இதை செய்யத் தவறாதீர்கள்! 

SCROLL FOR NEXT